இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 12 அம்ச திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு


இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 12 அம்ச திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு
x

Image Courtesy : @narendramodi twitter 

தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த 12 அம்ச திட்டம் ஒன்றை பிரதமர் மோடி முன்வைத்தார்.

ஜகார்தா,

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில், 20-வது தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்)-இந்தியா உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடாடோ அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி இந்தோனேசியாவுக்கு புறப்பட்டார். நேற்று அதிகாலை அங்கு சென்று சேர்ந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"ஆசியான் அமைப்புடன் இந்தியாவுக்கு 40 ஆண்டுகால தொடர்பு இருக்கிறது. இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த 12 அம்ச திட்டம் ஒன்றை முன்வைக்கிறேன்.

இதன்படி, பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி, இணையதள பொய் பிரசாரம் ஆகியவற்றுக்கு எதிராக கூட்டாக போராட வேண்டும். டிஜிட்டல் புரட்சியில் ஒத்துழைப்புக்காக இந்திய-ஆசியான் நிதியம் அமைக்கப்படும்.

தென்கிழக்கு ஆசியா-இந்தியா-மேற்கு ஆசியா-ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் பன்முனை இணைப்பகம் மற்றும் பொருளாதார வழித்தடத்தை உருவாக்க வேண்டும்.

இந்தியா-ஆசியான் நாடுகளிடையே வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பு பெருக வேண்டும். மக்களுக்கும், மக்களுக்கும் இடையிலான உறவு அதிகரிக்க வேண்டும்.

ஆசியான்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை காலவரையறையுடன் மறுஆய்வு செய்ய வேண்டும். தெற்குலக நாடுகள் சந்திக்கும் பிரச்சினைகளை பன்னாட்டு அமைப்புகளில் எழுப்ப வேண்டும்.

இந்திய மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகளை அளித்து வருகிறோம். அந்த அனுபவத்தை ஆசியான் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன். பேரிடர் நிர்வாகத்தில் ஒத்துழைப்புக்கு முன்வர வேண்டும். கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.


அனைத்து நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க கூட்டு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். தெற்கு சீன கடலுக்கான நடத்தை விதிமுறைகள், உறுதியானதாகவும், ஐ.நா. சட்டத்தை பின்பற்றுவதாகவும் இருக்க வேண்டும்.

நான் முன்பே சொன்னதை போல், இது போருக்கான சகாப்தம் அல்ல. பேச்சுவார்த்தையும், ராஜ்ய முயற்சிகளும்தான் அமைதிக்கு ஒரே தீர்வு ஆகும்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். மாநாட்டில், கடல்சார் ஒத்துழைப்பு, உணவு பாதுகாப்பு ஆகியவை பற்றிய 2 கூட்டு அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு வந்த ஆசியான் நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர், அவர் இந்தியா புறப்பட்டார். தனது இந்தோனேசிய பயணம், குறுகிய கால பயணமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்ததாக பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story