தெருநாய்கள் கடித்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு - மேலும் ஒரு குழந்தை காயம்


தெருநாய்கள் கடித்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு - மேலும் ஒரு குழந்தை காயம்
x

கோப்புப்படம்

உத்தரபிரதேசத்தில் தெருநாய்கள் கடித்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரேலி,

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிபி கஞ்ச் பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு குழந்தை காயமடைந்துள்ளது.

கானா கவுந்தியா கிராமத்தில் நேற்று அயான் (வயது 12) என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென தெருநாய்கள் சிறுவர்களை தாக்கியது. சிறுவர்கள் நாய்களுக்கு பயந்து ஓடினர். சிறுவன் அயான் ஓடும்போது தரையில் விழவே, தெருநாய்கள் அவன் மீது பாய்ந்து கடித்தன.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள், சிறுவனை நாய்களிடமிருந்து மீட்டனர். உடனடியாக அவர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிறுவன் அயான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை காயமடைந்தது.

பரேலியில் தெருநாய்கள் குழந்தைகளைத் தாக்குவது இது முதல் முறையல்ல. இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி தெருநாய்கள் தாக்கியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

நகரில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு பலமுறை கடிதம் எழுதியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story