சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்ட அறிவிப்பு; சூரத்கல்லில் 144 தடை உத்தரவு அமல்


சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்ட அறிவிப்பு; சூரத்கல்லில் 144 தடை உத்தரவு அமல்
x
தினத்தந்தி 28 Oct 2022 6:45 PM GMT (Updated: 28 Oct 2022 6:46 PM GMT)

சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்ற கோரி காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ள நிலையில் சூரத்கல் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

சுங்கச்சாவடி

தட்சிண கன்னடா மாவட்டத்தில் சூரத்கல் மற்றும் ஹெஜமாடி ஆகிய 2 இடங்களில் 10 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் 2 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த 2 சுங்கச்சாவடிகளிலும் வாகன ஓட்டிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதனால் சூரத்கல்லில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் வெகுநாட்களாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் அக்டோபர் 28-ந் தேதி(நேற்று) முதல் சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அதன் அருகேயே காலவரையற்ற தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

144 தடை உத்தரவு

இந்த நிலையில் நேற்று சூரத்கல் சுங்கச்சாவடியில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தி தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவு வருகிற 3-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நிருபர்களிடம் கூறுகையில், 'சூரத்கல் சுங்கச்சாவடியை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு இன்று(நேற்று) காலை 6 மணி முதல் வருகிற 3-ந் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பெரிய அளவில் போராட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது' என்று கூறினார்.


Next Story