சிக்கமகளூருவில் கைதான 2 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா? போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்


சிக்கமகளூருவில் கைதான 2 பேருக்கு பயங்கரவாதிகளுடன்  தொடர்பா? போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்
x
தினத்தந்தி 21 July 2023 6:45 PM GMT (Updated: 21 July 2023 6:45 PM GMT)

சிக்கமகளூருவில் கைதான 2 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் கைதான 2 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

2 பேர் கைது

சிக்கமகளூரு மாவட்டம் கைமரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் சையது காலித் அகமது உள்பட 2 பேர் அறை எடுத்து தங்கி இருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே பெங்களூருவில் சில பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்திருந்தனர். இதனால் சிக்கமகளூருவில் கைதானவர்களும் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

அதன்பேரில் அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

வேறொரு கொலை வழக்கில்...

விசாரணையில் சையது காலித் அகமது உள்ளிட்ட 2 பேருக்கும், பெங்களூருவில் கைதான பயங்கரவாதிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதும், அவர்கள் வேறொரு கொலை வழக்கில் பெங்களூரு போலீசாரால் தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் பெங்களூரு போலீசார் அறிவுறுத்தியதன் பேரிலேயே அவர்கள் 2 பேரையும் சிக்கமகளூரு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தது போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்துக்கு தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் 2 பேரையும் பெங்களூரு போலீசாரிடம், சிக்கமகளூரு போலீசார் ஒப்படைத்தனர்.

தொடர்பு இல்லை

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் நிருபர்களிடம் கூறுகையில், 'சிக்கமகளூருவில் கைதான சையது காலித் அகமது உள்ளிட்ட 2 பேருக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர்கள் வேறொரு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். அவர்களை பெங்களூரு போலீசாரிடம் ஒப்படைத்து விட்டோம்' என்றார்.


Next Story