உ.பி.யில் கொடூரம்: 2 சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாய் தேய்த்து சித்ரவதை


உ.பி.யில் கொடூரம்: 2 சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாய் தேய்த்து சித்ரவதை
x
தினத்தந்தி 6 Aug 2023 11:16 AM GMT (Updated: 6 Aug 2023 11:36 AM GMT)

பணம் திருடியதாக குற்றம் சாட்டி 2 சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் திருட்டு சந்தேகத்தின் பேரில் 2 சிறுவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை தேய்த்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த சித்ரவதைக்கு ஆளான சிறுவர்கள் இருவரும் 10 மற்றும் 15 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த கொடூரமான தாக்குதலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு கும்பல் அந்த சிறுவர்களை பச்சை மிளகாயை சாப்பிட வைத்தும், பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரைக் குடிக்க வைத்தும் துன்புறுத்துவதைக் காணமுடிகிறது. தாங்கள் சொல்வது போல செய்யவில்லை என்றால் அடித்துவிடுவோம் என்று சிறுவர்களை மிரட்டுகின்றனர்.

அந்த சிறுவர்கள் பணம் திருடியதாக குற்றம் சாட்டி, அவர்களை சிலர் பிடித்து கட்டி வைத்து இப்படி கொடுமைப்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் மற்றொரு தெளிவற்ற வீடியோவில், சிறுவர்கள் தரையில் முகம் குப்புறக் கிடப்பது தெரிகிறது. அவர்களின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டு, கால்சட்டை கீழே இழுக்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு நபர் அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயைத் தேய்க்கிறார். வலியால் அலறும் சிறுவர்களுக்கு மஞ்சள் நிற திரவம் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

ஆகஸ்டு 4-ந்தேதி எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய நிலையில், போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த்தா தெரிவித்துள்ளார்.


Next Story