லாரி மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் சாவு


லாரி மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் சாவு
x

மண்டியா அருகே மத்தூரில் லாரி மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மண்டியா:

மண்டியா அருகே மத்தூரில் லாரி மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் விபத்து

மண்டியா மாவட்டம் குத்துலு படாவனேவை சேர்ந்தவர் சதாம் செரீப்(23). இவர் குத்தூலு படாவனேவை சேர்ந்த, கலிம் செரீப் என்பவரின் மகன். கலீம் செரீப், தினசரி செய்தி தாள்களை வினியோகம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், இந்த பணியை அவரது மகன் சதாம் செரீப் கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களான நசீரா(24), நிகத்(20), ஜகீப்(36), காசீப்(25) ஆகியோருடன் காரில் பெங்களூருவுக்கு சென்றிருந்தார்.

காரை காசீப் ஓட்டினார். அனைவரும் பெங்களூரு சென்றுவிட்டு, காரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வந்தபோது, இவர்களது கார் முன்புறம் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கார், டிரைவர் காசீப்பின் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்புறம் மோதியது. இதில் காரின் முன்புறம் அப்பளம் போன்று நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கிய காசீப் மற்றும் சதாம் செரீப் உள்பட 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

2 பேர் சாவு

இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடி வந்து, 5 பேரையும் மீட்டு மண்டியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காசீப், சதாம் செரீப் ஆகியோர் பரிதாகமாக உயிரிழந்தனர். அவர்களது நண்பர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story