மேகாலயாவில் 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
மேகாலயாவில் 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சியில் இணைந்தனர்.
ஷில்லாங்,
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி ஆளுங்கட்சியாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்குகிறது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான மார்தான் சங்மா (மென்டிபத்தர் தொகுதி), மற்றும் ஜிம்மி டி. சங்மா (திக்ரிகில்லா தொகுதி) ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஆளும்கட்சியான தேசிய மக்கள் கட்சியில் இணைந்தனர்.
அவர்கள் இருவரும் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று பின்னர் 12 எம்.எல்.ஏ.க்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதையடுத்துதான் திரிணாமுல் காங்கிரஸ் மேகாலயாவில் முக்கிய எதிர்க்கட்சியாக மாறியது.
இந்த நிலையில் அவர்கள் மீண்டும் கட்சி தாவி உள்ளனர். கடந்த மாதத்தில் மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிமாலயா எம்.சங்பிலியங், பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் இருவர் கட்சி தாவியதால் திரிணாமுல் காங்கிரசின் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது.
தங்கள் கட்சியில் இணைந்த அவர்களை வரவேற்று முதல்-மந்திரி கான்ராட் கே.சங்மா கூறும்போது, "இரு எம்.எல்.ஏ.க்களின் வரவு, எங்களின் வளர்ச்சியை காட்டுகிறது. நாங்கள் சிறந்த மேகாலயாவை உருவாக்க இன்னும் சிறப்பாக உழைப்போம்" என்றார்.