ஒடிசாவில் தேர்வு பயத்தால் 2 மாணவர்கள் தற்கொலை
பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கஞ்சாம் மாவட்டம் பெர்ஹாம்பூரில் உள்ள சூர்யநகர் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர், நேற்று தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய நிலையில், இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த மாணவர் நேற்று நடைபெற்ற இயற்பியல் தேர்வில் முறைகேடு செய்ய முயன்றபோது பிடிபட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், பத்ராக் மாவட்டம் ஜஹாங்கீர் சாசன் கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தனது அத்தையின் வீட்டில் தங்கியிருந்து தேர்வுக்காக படித்து வந்துள்ளார். இன்றைய தினம் ஆங்கில தேர்வு நடைபெற இருந்த நிலையில், இன்று அதிகாலை அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த 2 சம்பவங்கள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தேர்வு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.