அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை: ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை: ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x

கோப்புப்படம்

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது 'மோடி' பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே அவர் மீது குஜராத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி சூரத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த கோர்ட்டு, அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.

இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

ஐகோர்ட்டில் தள்ளுபடி

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பின்னர் சூரத் மாவட்ட கோர்ட்டும் உறுதி செய்தது.

இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் ஐகோர்ட்டும் கடந்த 7-ந்தேதி தள்ளுபடி செய்தது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டரீதியாக சரிதான் எனக்கூறிய நீதிபதி, அதை நிறுத்தி வைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இன்று விசாரணை

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்.

அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனைக்கு தடை கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 18-ந்தேதி ஆஜரான மூத்த வக்கீல் சிங்வி, இந்த மனுவை 21 (இன்று) அல்லது 24-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.

இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு 21-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

அதன்படி இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பிரசாந்த்குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.

கேவியட் மனு

முன்னதாக ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது தனது கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து புர்னேஷ் மோடி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் அவர் மீண்டும் எம்.பி. பதவியை பெற முடியும். எனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரசார் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story