மகாத்மா காந்தியின் மீதான அமித் ஷா கருத்திற்கு எதிர்ப்பு


மகாத்மா காந்தியின் மீதான அமித் ஷா கருத்திற்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 10 Jun 2017 6:33 PM GMT (Updated: 10 Jun 2017 6:33 PM GMT)

மிகுந்த சாதுர்யமான பனியா என்று மகாத்மா காந்தியை பாஜக தலைவர் அமித் ஷா கூறியதற்கு எதிர்ப்பும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

பட்னா

பீகார் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ்வின் மகனுமான தேஜஸ்வி யாதவ் தனது டிவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். “ காந்திஜியை அமித் ஷா ‘பனியா’ என்று குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் அவரை அச்சமூகத்திற்கானவர் என்று நாட்டு மக்கள் முன்னால் சிறுமைப்படுத்துகிறார். காந்திஜியை மக்கள் தேசப்பிதா என்றுதான் இதுவரை நாட்டு மக்கள் அறிவார்கள் என்று கருத்திட்டுள்ளார். 

நேற்று ராய்ப்பூரில் பேசுகையில் அமித் ஷா காந்தியை இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தேஜஸ்வி யாதவ் மற்றொரு பதிவில், “ கோட்சேவின் வழிவந்தவர்களுக்கு காந்திஜியுடன் பிரச்சினையுண்டு. காந்திஜி அமைதி, உண்மை மற்றும் அகிம்சை ஆகியவற்றை பின்பற்றியவர். ஆனால் பாஜகவினர் இதற்கு நேர் எதிரான கொள்கைகளையும், விழுமியங்களையும் கொண்டிருப்பவர்கள், என்றார் அவர்.

இதே போல காந்திஜியின் பேரனான ராஜ்மோகன் காந்தி இந்தியாவில் “பிரிட்டிஷ் சிங்கத்தையும்” “வகுப்புவாத விஷத்தைக் கக்கும் பாம்புகளையும் வென்றெடுத்தவர், சாதுர்யமான பனியா என்பதையும் கடந்து நிற்பவர். காந்தி இன்றிருந்தால் அப்பாவிகளையும், அடித்தட்டு மக்களையும் வேட்டையாடும் சக்திகளை தோற்கடிப்பதை இலக்காக கொண்டிருப்பார் என்றார்.

காந்தியின் மற்றொரு பேரனான கோபாலகிருஷ்ண காந்தி கூறுகையில், “ இந்த வர்ணனையைக் கண்டு நான் சிரித்திருப்பேன்; ஆனால் ரசனைக்கெட்ட, உள் நோக்கம் கொண்ட இந்த கருத்து அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை” என்றார். 

வரலாற்றாசிரியர் ராமச்சந்திரா குஹா கூறும்போது, அமித் ஷாவின் இக்கருத்து கொச்சையானது, நாட்டின் ஆளுங்கட்சியான பாஜகவின் தலைவரிடமிருந்து மதிப்பற்ற கருத்து வெளிவந்துள்ளது என்றார்.


Next Story