பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி விட்டு திரும்பியது பெரும் சவாலாக இருந்தது

பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி விட்டு திரும்பியது பெரும் சவாலாக இருந்தது என்று தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ராணுவ அதிகாரி கூறினார்.
புதுடெல்லி,
அதையொட்டி, அந்த தாக்குதல் பற்றி ‘நவீன ராணுவ கதாநாயகர்களின் உண்மை கதைகள்’ என்ற புத்தகத்தை சிவ ஆரூர், ராகுல்சிங் ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர். பெங்குயின் இந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
புத்தகத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் விதமாக, அம்முகாமில் இருந்த ராணுவ வீரர்களை கொண்டே ஒரு குழு அமைக்கப்பட்டது.
தாக்குதல் நடத்த வேண்டிய 4 பயங்கரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டன. பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு முன்பு, அங்குதான் தங்கி இருப்பது வழக்கம். அந்த முகாம்கள், பாகிஸ்தான் ராணுவ நிலைகளுக்கு 500 மீட்டர் தொலைவில்தான் உள்ளன. பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளும் அடிக்கடி அங்கு வந்து செல்வார்கள். அந்த முகாம்கள் குறித்த உளவு தகவல்களும் சேகரிக்கப்பட்டன.இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு உளவுத்துறையும், ‘ரா’வும் ஒப்புதல் அளித்தன. தாக்குதல் பற்றிய இறுதிக்கட்ட சிபாரிசுகள், மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டன.
தாக்குதல் நடத்தும் குழுவுக்கு தலைவராக ராணுவ மேஜர் மைக் டாங்கோ தேர்வு செய்யப்பட்டார். குழுவில் இடம்பெற்ற 19 வீரர்களை அவரே தேர்வு செய்தார். யார் யார் என்னென்ன ஆயுதங்களை எடுத்துச்செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.சிறப்பான வீரர்களை தேர்வு செய்தாலும், திரும்பி வருவதுதான் கவலையாக இருந்தது. தங்கள் வீரர்களை இழக்க நேரிடும் என்பதையும் மைக் டாங்கோ உணர்ந்து இருந்தார்.
ஜெய்ஸ்–இ–முகமது பயங்கரவாத இயக்கத்தில் 4 உளவாளிகளை இந்திய ராணுவம் ஊடுருவச் செய்திருந்தது. அவர்களிடம் இருந்தும் செல்போனில் தகவல்கள் பெறப்பட்டன.
ஒரு மணி நேரத்தில் அதிரடியாக 4 முகாம்கள் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அவற்றில் 20 பயங்கரவாதிகள் இறந்து இருக்கலாம் என்று குத்துமதிப்பாக கணக்கிட்டது. பிறகு உளவுத்துறை கணக்கெடுத்ததில், 40 பயங்கரவாதிகளும், 2 பாகிஸ்தான் வீரர்களும் பலியானது தெரிய வந்தது.தாக்குதலுக்கு பிறகு, முதலில் வந்த வழியை பயன்படுத்தாமல், வேறு வழியை இந்திய ராணுவம் பின்பற்றியது. அது, நீளமானதாக இருந்தாலும், பாதுகாப்பானது.
இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத்தினர் கையில் கிடைத்த ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். ஒருகட்டத்தில், காதை உரசும் வகையில் குண்டு சீறிப்பாய்ந்தது. தான், ஒரு அடி உயரமாக இருந்திருந்தால், குண்டு தன் மீது பாய்ந்திருக்கும் என்று மேஜர் மைக் டாங்கோ தெரிவித்தார். திரும்பி வருவதுதான் சவாலாக இருந்ததாக அவர் கூறினார்.
குண்டு மழைக்கிடையே நம் ராணுவ வீரர்கள் தரையில் ஊர்ந்தபடியே பத்திரமாக திரும்பினர். சூரிய உதயத்துக்கு முன்பே, அதாவது அதிகாலை 4.30 மணிக்கு இந்திய எல்லைக்குள் நுழைந்தனர்.
இவ்வாறு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.