இரட்டை இலை சின்னம் வழக்கு: தேர்தல் கமிஷன் விசாரணை 16–ந்தேதிக்கு மாற்றம்

நாளை நடைபெற இருந்த இரட்டை இலை சின்னம் வழக்கு தொடர்பான விசாரணையை வருகிற 16–ந் தேதிக்கு தேர்தல் ஆணையம் திடீரென மாற்றி உள்ளது.
புதுடெல்லி,
இது தொடர்பான வழக்கு டெல்லி தலைமை தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ளது. 2 அணியினரும் தங்களுக்கு வலு சேர்க்கும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, சின்னம் யாருக்கு என்பதை வருகிற 31–ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஆவணங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு டி.டி.வி.தினகரன் அணியினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அடுத்த மாதம் (நவம்பர்) 10–ந் தேதிக்குள் அறிவிக்க உத்தரவிட்டது.
இந்தநிலையில், சின்னம் தொடர்பான முதல்கட்ட விசாரணை கடந்த 6–ந் தேதி டெல்லி தலைமை தேர்தல் கமிஷனில் நடைபெற்றது. அப்போது இரு அணிகள் சார்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 13–ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைப்பதாக தேர்தல் கமிஷனர்கள் அறிவித்தனர். விசாரணைக்கு ஆஜராக இரு அணிகள் சார்பிலும் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே டி.டி.வி.தினகரன் அணியினர் தங்கள் தரப்பு வாதங்களை வலுவாக எடுத்துரைக்க சற்று கூடுதல் தயாரிப்பு தேவைப்படுவதாகவும், எனவே, மேலும் ஒரு நாள் அவகாசம் தருமாறும் தேர்தல் கமிஷனில் நேற்று முன்தினம் மனு அளித்தனர்.
இதனையடுத்து இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை 16–ந் தேதிக்கு (திங்கட்கிழமை) மாற்றப்பட்டு உள்ளது.இதற்கான உத்தரவை தேர்தல் கமிஷனர்கள் நேற்று பிறப்பித்தனர். 16–ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.