ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்குரியது: பரூக் அப்துல்லா பேச்சால் சலசலப்பு

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்குரியது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஸ்ரீநகர் எம்பியுமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘ஜம்மு காஷ்மீர் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பில்லை. சுற்றிலும், பாகிஸ்தான், சீனா, இந்தியா இருப்பதால் தனி நாடாக செயல்பட முடியாது. அதுபோன்ற சூழலில் காஷ்மீரை தவிர மற்ற நாடுகளிடம் அணு குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் இருக்கும். காஷ்மீரால் எதுவும் செய்ய முடியாது. இந்தியாவுடன் அன்புடன் இணையும் முடிவை எடுத்த காஷ்மீர் மக்களை மத்திய அரசு உதாசீனப்படுத்துகிறது. காஷ்மீர் மக்களை இந்தியா உரிய முறையில் நடத்த வில்லை. இதுவே காஷ்மீர் தற்போது சந்திக்கும் பிரச்னைகளுக்கு காரணம்.
காஷ்மீருக்கு சுயாட்சி என்பது அடிப்படை உரிமை. அதை வழங்கினால் மட்டுமே காஷ்மீரில் அமைதி திரும்பும். இதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பாகிஸ்தானுக்கு சொந்தமானது. காஷ்மீ்ர் இந்தியாவின் பகுதி. இந்தியர்கள் மட்டுமின்றி உலகிற்கே இதை உறுதிபட கூறுகிறேன். இதை மாற்ற முடியாது. இதற்காக எத்தனை போர் நடத்த விரும்பினாலும் இது மாறாது’’ எனக்கூறினார்.
Related Tags :
Next Story