சென்னை உள்ளிட்ட 9 ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளாக நியமிக்க 40 பேரின் பெயர்கள் பரிந்துரை


சென்னை உள்ளிட்ட 9 ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளாக நியமிக்க 40 பேரின் பெயர்கள் பரிந்துரை
x
தினத்தந்தி 12 Nov 2017 10:00 PM GMT (Updated: 12 Nov 2017 6:43 PM GMT)

சென்னை உள்ளிட்ட 9 ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளாக நியமிக்க 40 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

சென்னை உள்ளிட்ட 9 ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளாக நியமிக்க 40 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு பரிசீலிக்கிறது.

ஐகோர்ட்டு நீதிபதி பணியிடங்கள்

நமது நாட்டில் 24 ஐகோர்ட்டுகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1,079 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. செப்டம்பர் 1–ந் தேதி நிலவரப்படி, இதில் 413 காலியிடங்கள் உள்ளன. இதனால் 666 நீதிபதிகளைக் கொண்டு, 24 ஐகோர்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

வழக்கமாக, ஐகோர்ட்டின் 3 மூத்த நீதிபதிகளைக் கொண்ட குழு (கொலிஜியம்), ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்துக்கான பெயர்களை தேர்வு செய்து, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளைக் கொண்ட குழுவுக்கு பரிந்துரை செய்யும். அதை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும்.

உளவுத்துறை அறிக்கை

பரிந்துரை செய்யப்பட்ட நபர்களைப் பற்றிய உளவுத்துறை அறிக்கையுடன், பட்டியலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழுவின் இறுதி பரிசீலனைக்கு சட்ட அமைச்சகம் அனுப்பும்.

ஆனால் உளவுத்துறை அறிக்கை பெறுவது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழுவுக்கு பிடிக்கவில்லை. நீதித்துறையில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது உளவுத்துறை அல்ல, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழுதான் என்று சமீபத்தில் அது கருத்து தெரிவித்தது.

40 நீதிபதிகள் பட்டியல்

இந்த நிலையில் சென்னை, கர்நாடகம், ஜார்கண்ட், குஜராத், திரிபுரா உள்ளிட்ட 9 ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளாக நியமிக்க 40 பேரின் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழுவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

இதை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே கடந்த ஆண்டு 126 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 1989–க்கு பின்னர் இது சாதனை அளவு என்றும், மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

ஆண்டுக்கு சராசரியாக 82 நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘தற்போதைய நிலவரப்படி இந்த ஆண்டில் இதுவரையில் 106 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 31–ல் இந்த எண்ணிக்கை 126–ஐ கடந்துவிடும்’’ என்று குறிப்பிட்டார்.


Next Story