அரசியலில் இருந்து விலகுகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி?


அரசியலில் இருந்து விலகுகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி?
x
தினத்தந்தி 15 Dec 2017 7:14 AM GMT (Updated: 15 Dec 2017 7:14 AM GMT)

அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலக முடிவு செய்தார்.  இதையடுத்து,  காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக சோனியா காந்தியின் மகனும், துணைத்தலைவருமான ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மேலும், ராகுல் காந்தியை தலைவர் பதவிக்கு முன் மொழிந்து ஏராளமான காங்கிரசார் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மொத்தம் 89 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர் காங்கிரஸ் தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக, அறிவிக்கப்பட்டது.டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி காலை 11 மணிக்கு ராகுல் காந்தி பதவி ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இன்று  பாராளுமன்றம் வந்த சோனியா காந்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”ஓய்வு பெறுவதுதான் தற்போது எனது பணி” என்று தெரிவித்துள்ளார். இதனால், அரசியலில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு 7 ஆண்டுகள் கழித்து 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றிருந்தார். 


Next Story