மதவாத பதற்றம், பயங்கரவாதத்திற்கு பின்னால் இருப்பது யார்? ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் கேள்வி


மதவாத பதற்றம், பயங்கரவாதத்திற்கு பின்னால் இருப்பது யார்? ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் கேள்வி
x
தினத்தந்தி 17 Dec 2017 2:22 PM GMT (Updated: 17 Dec 2017 2:22 PM GMT)

‘பா.ஜனதாவின் வெறுப்பு அரசியலை அன்பால் வெல்வோம்’ என ராகுல் காந்தியின் பேச்சுக்கு ராஜ்நாத் சிங் பதிலளித்து உள்ளார்.


பெங்களூரு,

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். 

அவர் தனது கன்னிப் பேச்சில் ‘பா.ஜனதாவின் வெறுப்பு அரசியலை அன்பால் வெல்வோம்’ என்று சூளுரைத்தார்.  

பா.ஜனதாவுடன் கொள்கை வேறுபாடு நமக்கு இருந்தபோதிலும் கூட அவர்களை காங்கிரஸ் சகோதர, சகோதரிகளாகவே பார்க்கிறது. வெறுப்பை வெறுப்பால் முறியடிக்க நாம் விரும்பவில்லை.  அவர்கள் மக்களின் குரலை ஒடுக்க விரும்புகிறார்கள். ஆனால் நாம் மக்களை பேச அனுமதிப்போம். அவர்கள் அவதூறு கூறினால் நாம் மரியாதையும் அளிப்போம். பாதுகாவலராகவும் இருப்போம். முன்பும் சரி, எதிர்காலத்திலும் சரி சவால்களை காங்கிரஸ் அன்போடும், கருணையோடுமே எதிர்கொள்ளும். காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பம் போன்றது. அதை நாம் முன்னெடுத்துச் செல்ல உறுதி கொள்வோம். கட்சியின் உயரிய தலைமைப் பதவியை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் என ராகுல் காந்தி பேசியிருந்தார்.

‘பா.ஜனதாவின் வெறுப்பு அரசியலை அன்பால் வெல்வோம்’ என ராகுல் காந்தியின் பேச்சுக்கு ராஜ்நாத் சிங் பதிலளித்து உள்ளார். 

காங்கிரஸ் கட்சி பற்ற வைத்த தீயை பாரதீய ஜனதா அணைத்து வருகிறது என கூறிஉள்ளார் ராஜ்நாத் சிங்.

பாரதீய ஜனதா கட்சியின் கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், ராகுல் காந்திக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். காங்கிரஸ் கட்சி இப்போது புதிய தலைவரை பெற்று உள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு பாரதீய ஜனதாதான் காரணம் என அவர் குற்றம் சாட்டிஉள்ளார். மதவாத பதற்றம், பயங்கரவாதம், நக்சலைட் தீவிரவாதம் மற்றும் காஷ்மீர் அமைதியின்மைக்கு பின்னால் இருப்பது யார்? என நான் அவரிடம் (ராகுல் காந்தி) கேள்வியை எழுப்ப விரும்புகின்றேன். தேசத்தில் வாரிசு அரசியலுக்கு பின்னால் இருப்பது யார்? காங்கிரஸ் கட்சி பற்ற வைத்த நெருப்பை பா.ஜனதா அணைக்கிறது என்பதை ராகுல்  தெரிந்துக்கொள்ளட்டும், தேசத்தை எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பது பா.ஜனதாவிற்கு மட்டுமே தெரியும் என்பது உலகத்திற்கே தெரியும் என கூறிஉள்ளார். 


Next Story