மத்திய சட்ட மந்திரியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
மத்திய சட்ட மந்திரியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குற்றச்சாட்டு எதிரொலி.
புதுடெல்லி,
டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி ஜே. செல்லமேஸ்வர், சக மூத்த நீதிபதிகளான ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோருடன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பற்றி குற்றம்சாட்டினர். சுப்ரீம் கோர்ட்டு நிர்வாகம் பற்றியும் குறை கூறினர். ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இது முன் எப்போதும் நிகழ்ந்திராத அபூர்வ நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை பிரதமர் நரேந்திர மோடி அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் நீதிபதிகள் கூறிய குற்றச்சாட்டுகள் பற்றியும், அதற்கு காண வேண்டிய பரிகாரங்கள் குறித்தும் விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஆலோசனையின்போது அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.