ஸ்மிரிதி இரானிக்கு தொல்லை: பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு தொல்லை. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரியாக இருப்பவர் ஸ்மிரிதி இரானி (வயது 42). இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு நாள், காரில் டெல்லி லுட்யென்ஸ் பகுதியில் சென்றார்.
அவருடைய காரை, மற்றொரு காரில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் பின்தொடர்ந்து சென்று உள்ளனர்.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த மாணவர்களின் காரை வழிமறித்து அவர்களை கைது செய்தனர். அவர்கள் மீது சாணக்கியபுரி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 18, 19 வயதான அந்த மாணவர்கள் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது.
அவர்கள் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியை மானபங்கப்படுத்தும் நோக்கத்தில் குற்ற அச்சுறுத்தல் விடுத்து, காரில் பின்தொடர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சித்தான்சு, கரண், அவினாஷ், அமித் ஆகிய அந்த 4 மாணவர்கள் மீது டெல்லி பெருநகர குற்றவியல் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதை மாஜிஸ்திரேட்டு ஸ்னிக்தா சர்வாரியா ஏற்றுக் கொண்டார். இந்த வழக்கின் விசாரணையை அவர் அக்டோபர் மாதம் 15–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
தற்போது ஜாமீனில் உள்ள அந்த மாணவர்கள், கோர்ட்டில் அன்றைய தினம் ஆஜர் ஆவதற்கு சம்மன் அனுப்பப்படும்.