தாவூத் இப்ராஹிமுக்கு பதிலாக சர்க்கரையை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு; காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் இருந்து நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமை கொண்டு வருவதற்கு பதிலாக மத்திய அரசு சர்க்கரையை கொண்டு வந்துள்ளது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. #CentralGovernmentOfIndia
மும்பை,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில மந்திரி மற்றும் மூத்த தலைவரான ஹர்சவர்தன் கூறும்பொழுது, டெல்லியை சேர்ந்த நிறுவனம் ஒன்று சாக்லேட்டுகளை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்கிறது. அங்கிருந்து 20 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்கிறது. நமது நாட்டில் சர்க்கரை உற்பத்தி அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் ஏன் மத்திய அரசு சர்க்கரையை இறக்குமதி செய்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்ற மத்திய அரசின் இறக்குமதி கொள்கையால் உள்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் கோடி அளவில் பாதிப்பு ஏற்படும். இதனால் மகாராஷ்டிராவில் ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என கூறினார்.
இதேபோன்று மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் பேசும்பொழுது, பாகிஸ்தானில் இருந்து நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால் அவரது அரசு அங்கிருந்து சர்க்கரையை கொண்டு வந்துள்ளது என கூறியுள்ளார்.