பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த தூதரக முன்னாள் பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் 2–ம் நிலை செயலாளராக பணியாற்றியவர், மாதுரி குப்தா.
புதுடெல்லி,
பெண் அதிகாரியான மாதுரி குப்தா தனது பதவி காலத்தில் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு, இந்தியா பற்றிய ரகசிய தகவல்களை இ–மெயில் மூலம் பரிமாறியதாக 2010–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அவர் மீது அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பாக 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மாதுரி குப்தா குற்றவாளி என்று நேற்று முன்தினம் கோர்ட்டு அறிவித்து இருந்தது. நேற்று அவருக்கான தண்டனையை நீதிபதி சித்தார்த் சர்மா வழங்கினார். அப்போது உளவு பார்த்தல் தொடர்பான குற்றங்களுக்கு அளிக்கப்படும் அதிகபட்ச தண்டனையான 3 ஆண்டு சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கி உத்தரவிட்டார்.
மாதுரி குப்தாவுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட்டு, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்வதற்கு அனுமதியும் அளித்தது.