காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் பலி


காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 15 Sep 2018 10:00 PM GMT (Updated: 2018-09-16T02:14:28+05:30)

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் சவுகாம் கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் போலீசாருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

பாதுகாப்பு படையினர் விடியவிடிய பயங்கரவாதிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை அவர்கள் நெருங்கினர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் சுட்டனர்.

சிறிதுநேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பாதுகாப்பு படையினர் காயம் இன்றி உயிர்தப்பினர். முன்னதாக குல்காம் மற்றும் அனந்த்நாக் பகுதியில் ரெயில் போக்குவரத்தும், இணையதள சேவையும் நேற்று நிறுத்தப்பட்டது.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், போலீசாரை கொன்று ஆயுதங்களை திருடியது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

இதற்கிடையே குல்காம் பகுதியில், பயங்கரவாதிகளின் தேடுதல் வேட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். அப்போது பாதுகாப்பு படையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தும், துப்பாக்கியால் சுட்டும் போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 2 பேரின் உடலில் குண்டு பாய்ந்தது.

இதற்கிடையே ரஜோரி மாவட்டம் நவுசரா செக்டர் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ஒரு இந்திய வீரர் காயம் அடைந்தார். இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்தது.



Next Story