அரசு உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் மோடி படத்தை அகற்றவேண்டும்: மத்திய பிரதேச கோர்ட் உத்தரவு


அரசு உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் மோடி படத்தை அகற்றவேண்டும்: மத்திய பிரதேச கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 20 Sep 2018 6:41 AM GMT (Updated: 2018-09-20T12:11:15+05:30)

மத்திய பிரதேசத்தில் அரசு உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் வைக்கப்பட்ட மோடி படத்தை உடனே அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

போபால்,

அனைவருக்கும் வீடு என்ற திட்ட இலக்குடன் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியுடன் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட நிதி உதவி செய்யப்படுகிறது.  மத்திய பிரதேசத்தில், அரசின் மானியம் மூலம் கட்டப்படும் இந்த வீடுகளின் முகப்புகள் மற்றும் சமையல் அறையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் படம் இடம் பெற்ற டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன. 450X600 மி.மீட்டர் அளவுக்கு  மோடியின் படம் பெற்ற டைல்ஸ்கள் பதிக்கப்பட வேண்டும் என்று சிவராஜ் சிங் சவுகானின் அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், மத்திய பிரதேச ஐகோர்ட்டில், அங்குள்ள பத்திரிகையாளர் ஒருவர், வீடுகளில் வைக்கப்பட்ட மோடியின் படத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, அரசின் திட்ட இலச்சினை மட்டும் வைத்தால் போதுமானது என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதேபோல், இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்றுமாறு வற்புறுத்தக்கூடாது என்று நாங்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டதாகவும் தெரிவித்தது.

இதையடுத்து, இடைக்கால உத்தரவு பிறப்பித்த மத்திய பிரதேச ஐகோர்ட், அரசின் நலத்திட்ட உதவியின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் பதிக்கப்பட்ட மோடியின்  படம் மற்றும் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகானின் படங்களை உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், உத்தரவை பின்பற்றியதை அறிக்கையாக வரும் டிசம்பர் 20 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story