ராகுல் உண்மைகளை பற்றி அறியாதவர்; எழுதி கொடுப்பவற்றை படிக்கிறவர்: யோகி குற்றச்சாட்டு


ராகுல் உண்மைகளை பற்றி அறியாதவர்; எழுதி கொடுப்பவற்றை படிக்கிறவர்:  யோகி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Sep 2018 3:28 PM GMT (Updated: 22 Sep 2018 3:28 PM GMT)

ராகுல் காந்தி உண்மைகளை பற்றி அறியாதவர், எழுதி கொடுப்பவற்றை படிக்கிறவர் என யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ரபேல் ஒப்பந்தம் பற்றி பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ள தகவலில், உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனம் தொடர்பாக எங்களுக்கு வேறு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என கூறினார்.

இதற்கு பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்றும் அவர் ஒரு திருடன் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக கூறினார்.

இந்த நிலையில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, ராகுல் ஓர் உதவியற்றவர்.  உண்மைகளை பற்றி அறியாத அவர் எழுதி கொடுப்பவற்றை படிக்கிறார் என கூறினார்.

இந்திய சுதந்திரத்திற்கு பின் 70 வருடங்களுக்கும் கூடுதலாக காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி குடும்பத்தினரின் தொடர்ச்சியான அரசின் கீழ் ஏழைகள் இன்னும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.

அரசு திட்டங்களின் பலன்கள் உரிய மக்களுக்கு சென்றடையவில்லை.  இந்த திட்டங்கள் பற்றி ஏழைகள் தெரிந்து இருந்தால் அவர்கள் வறுமை நிலைக்கு சென்றிருக்கமாட்டார்கள்.

இந்திய மக்களிடம் காங்கிரஸ் மற்றும் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்.  யார் திருடன் என்று ஒவ்வொருவருக்கும் தெரியும் என கூறினார்.

அவர்கள் (காங்கிரஸ் கட்சி) நாட்டை சாதி மற்றும் புவி பரப்பு ஆகியவற்றால் பிரித்தனர்.  தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் வகுப்புவாதம் ஆகியவற்றின் முன் சரணடைந்து விட்டனர் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாடு முன்னேற்றத்தினை நோக்கி பயணிக்கிறது என்றும் கூறியுள்ளார்.


Next Story