காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ‘ரபேல்’ விமான பேரம் ரத்து ஆனதற்கு காரணம், சோனியா மருமகன் - பா.ஜனதா புதிய தகவல்


காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ‘ரபேல்’ விமான பேரம் ரத்து ஆனதற்கு காரணம், சோனியா மருமகன் - பா.ஜனதா புதிய தகவல்
x
தினத்தந்தி 24 Sep 2018 11:00 PM GMT (Updated: 24 Sep 2018 8:18 PM GMT)

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், ‘ரபேல்’ விமான பேரம் ரத்தாக சோனியா காந்தியின் மருமகன் காரணமாக இருந்ததாக பா.ஜனதா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

‘ரபேல்’ போர் விமான விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறது. அதற்கு பதிலடியாக பா.ஜனதா, சோனியா காந்தியின் மருமகனும், ராகுல் காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வதேராவை இவ்விவகாரத்தில் இழுத்துள்ளது.

இதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான கஜேந்திர சிங் ஷெகாவத், நேற்று டெல்லியில் பா.ஜனதா தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமான ஆயுத வர்த்தகர் சஞ்சய் பண்டாரி, கடந்த 2008-ம் ஆண்டு, ‘ஆப்செட் இந்தியா சொல்யுசன்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். ராணுவ தளவாடங்களை விற்பதற்கும், வாங்குவதற்குமான சேவை வழங்கும் நிறுவனமாக அது செயல்பட தொடங்கியது.

அந்த நிறுவனம், பெரிய ராணுவ தளவாட கண்காட்சிகளில் பங்கேற்றது. ஆனாலும், பெரிதாக சாதிக்க முடியவில்லை.

அதே நேரத்தில், பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ‘ரபேல்’ போர் விமானம் வாங்குவது குறித்து பேசி வந்தது. அந்த ஒப்பந்தத்தை இறுதி செய்து, டசால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது சேவை வழங்கும் நிறுவனமாக ‘ஆப்செட் இந்தியா சொல்யுசனை’ ஏற்றுக்கொள்ளச்செய்ய வேண்டும் என்று ராபர்ட் வதேரா விரும்பினார்.

அவரது நிர்ப்பந்தத்தின் பேரில், ஆப்செட் இந்தியா சொல்யுசன் நிறுவனத்தை சேவை வழங்கும் நிறுவனமாக ஏற்றுக்கொள்ளுமாறு டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வற்புறுத்தியது. ஆனால், டசால்ட் நிறுவனம் அதை ஏற்கவில்லை. அதனால்தான், அந்த பேரத்தையே காங்கிரஸ் அரசு ரத்து செய்து விட்டது.

அந்த பேரத்தை ரத்து செய்தது ஏன்? என்று அருண் ஜெட்லி கேட்டதற்கு காங்கிரஸ் கட்சி இதுவரை பதில் அளிக்கவில்லை. காங்கிரஸ் அரசு, தேச பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதுடன், ராபர்ட் வதேரா, சஞ்சய் பண்டாரி ஆகியோரின் நலன்களை பாதுகாத்தது.

ராபர்ட் வதேரா-சஞ்சய் பண்டாரி ஆகியோருக்கு இடையிலான நெருக்கம் எல்லோருக்கும் தெரியும். இருவரும் எத்தனையோ கண்காட்சிகளில் இணைந்து பங்கேற்றுள்ளனர். துபாயிலும் ஒன்றாக சுற்றி உள்ளனர்.

சஞ்சய் பண்டாரியின் நிறுவனத்தை ஏற்காததால்தான், இப்போதும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைப்பதற்கு காங்கிரஸ் விரும்புகிறது. அதன்மூலம், டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தை பழிவாங்க பார்க்கிறது. எந்த வகையிலும் இதை செயல்படுத்தவிட மாட்டோம் என்று மறைமுகமாக சொல்கிறது. எதிர்காலத்தில், எந்த சர்வதேச நிறுவனமாக இருந்தாலும், சஞ்சய் பண்டாரி-ராபர்ட் வதேரா நிறுவனம் மூலம் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்று காட்ட விரும்புகிறது.

இந்த பின்னணியில்தான், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காய்ங்ஸ ஹோலண்டேவுக்கும், ராகுல் காந்திக்கும் நெருக்கம் ஏற்பட்டது. ‘ரபேல்’ ஒப்பந்தத்தை சீர்குலைக்க இருவரும் முயன்று வருகிறார்கள். இதற்காக ராகுல் காந்தி சர்வதேச சதியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், இந்தியாவை இழிவுபடுத்தவும், ராணுவ விமானப்படையின் மனஉறுதியை குலைக்கவும் சதி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story