உலக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு: பிரதமர் மோடிக்கு ‘சியோல் அமைதி விருது’


உலக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு: பிரதமர் மோடிக்கு ‘சியோல் அமைதி விருது’
x
தினத்தந்தி 24 Oct 2018 11:45 PM GMT (Updated: 2018-10-25T03:21:37+05:30)

உலக பொருளாதார வளர்ச்சியின் சிறந்த பங்களிப்புக்காக, பிரதமர் மோடிக்கு தென்கொரியா சியோல் அமைதி விருதினை வழங்க உள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக உயர்ந்த ‘சியோல் அமைதி விருது’ வழங்கப்படுவதாக தென்கொரியா அறிவித்து உள்ளது.

24-வது ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியா நாட்டின் சியோல் நகரில் கடந்த 1990-ம் ஆண்டு நடந்தது. இந்த போட்டிகள் வெற்றிகரமாக அமைந்ததன் நினைவாக அமைதி விருது ஒன்றை கொரிய அரசு நிறுவியது. கொரிய தீபகற்பம் மற்றும் ஒட்டுமொத்த உலக அமைதிக்காக கொரிய மக்கள் கொண்டுள்ள ஆவலை அங்கீகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த விருது, ‘சியோல் அமைதி விருது’ என அழைக்கப்படுகிறது.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதிக்கு முக்கிய பங்காற்றுவோருக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அனான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த வரிசையில் 2018-ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருதுக்காக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு செய்து வருவதற்காக மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்தியா மற்றும் ஒட்டுமொத்த உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு மோடியின் பங்களிப்பு மற்றும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான சமூக பொருளாதார வேறுபாட்டை குறைத்தது போன்ற அவரது நடவடிக்கைகளை விருதுக்குழு அங்கீகரித்து உள்ளது.

மேலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மூலம் தனது நிர்வாகத்தை தூய்மையாக நடத்தி வரும் மோடிக்கு இந்தக்குழு பாராட்டு தெரிவித்து உள்ளது. உலக நாடுகளுக்கு இடையேயான உயிர்ப்பான கொள்கை மற்றும் கிழக்கு சார்ந்த கொள்கைகள் மூலம் பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு பிரதமர் மோடி அளித்து வரும் பங்களிப்பையும் பாராட்டியுள்ளது.

புகழ்வாய்ந்த இந்த விருதை தனக்கு வழங்குவதற்காக கொரிய குடியரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து இருப்பதாகவும், இந்த விருதை அவர் ஏற்றுக்கொள்வதாகவும் வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டு இருக்கிறது. பிரதமர் மோடிக்கும், சியோல் அமைதி விருது அறக்கட்டளைக்கும் வசதியான ஒரு நாளில் இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story