‘என்னை எதிர்க்க முடியாததால், எனது தாயை குறி வைக்கிறார்கள்’ - காங்கிரஸ் மீது மோடி தாக்கு


‘என்னை எதிர்க்க முடியாததால், எனது தாயை குறி வைக்கிறார்கள்’ - காங்கிரஸ் மீது மோடி தாக்கு
x
தினத்தந்தி 24 Nov 2018 11:30 PM GMT (Updated: 2018-11-25T02:13:10+05:30)

அரசியல் ரீதியாக தன்னை எதிர்க்க முடியாததால், தனது தாயை காங்கிரசார் குறிவைப்பதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

சதர்பூர்,

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், பா.ஜனதா போன்ற கட்சிகளின் தலைவர்கள் ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் இந்தூரில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக பிரதமரை விமர்சித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சி கண்டிருக்கிறது. அதன் மதிப்பு உங்கள் (மோடி) அன்பு தாயின் வயதுக்கு அருகே சென்று விட்டது என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் தாய் ஹீராபென்னுக்கு 97 வயது ஆகிறது.

இவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் அரசியல் பிரச்சினைகளில் தனது தாயை இழுக்கும் நடவடிக்கைக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய பிரதேசத்தின் சதர்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சுமார் 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை நான் வெற்றிகரமாக எதிர்த்து வருகிறேன். ஆனால் காங்கிரஸ் தலைவர்களுக்கு அரசியல் ரீதியாக மோடியை எதிர்க்க முடியவில்லை. எனவே தற்போது நீங்கள் (காங்கிரசார்) எனது தாயை குறிவைத்து இருக்கிறீர்கள். அரசியல் குறித்து எதுவும் தெரியாத அப்பாவியான ஒரு தாயை தேவையில்லாமல் இழுக்கிறீர்கள்.

இப்படி ஒருவரின் தாயை அரசியல் விவகாரத்தில் இழுப்பதை மக்கள் ரசிக்கமாட்டார்கள். மத்திய பிரதேச தேர்தலில் கூட கிராமப்புற மக்கள் கூட இதை விரும்பமாட்டார்கள். இத்தகைய பழக்கம் காங்கிரஸ் தலைவர்களுக்கு நல்லதல்ல. இதுபோன்ற தலைவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுமாறு அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை கேட்டுக்கொள்கிறேன்.

காங்கிரசார் என்னை மட்டுமல்ல, முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை கூட தாக்குகிறார்கள். மத்திய பிரதேசத்தில் எந்த ராஜா அல்லது மகாராஜாவாலும் வளர்ச்சியை கொண்டு வர முடியவில்லை. ஆனால் சிவராஜ் சிங் சவுகான் போன்ற ஏழைகளுக்கு ஆதரவான தலைவரால்தான் வளர்ச்சியை ஏற்படுத்த முடிந்தது.

55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியையும், சிவராஜ் சிங் சவுகான் தலைமையின் கீழ் நடந்து வரும் 15 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியையும் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சி சாதியை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறது, வளர்ச்சிக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. ஆனால் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் மாநிலம் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.Next Story