பிரதமர் மோடி, போலி வாக்குறுதி அளித்ததாக குற்றச்சாட்டு: ‘என்ன விலை கொடுத்தாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்’ - சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உறுதி


பிரதமர் மோடி, போலி வாக்குறுதி அளித்ததாக குற்றச்சாட்டு: ‘என்ன விலை கொடுத்தாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்’ - சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உறுதி
x
தினத்தந்தி 25 Nov 2018 11:30 PM GMT (Updated: 25 Nov 2018 8:30 PM GMT)

அயோத்தியில், ‘என்ன விலை கொடுத்தாவது ராமர் கோவிலை கட்டுவோம்’ என உறுதிபட கூறிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி போலி வாக்குறுதி அளித்ததாக குற்றம் சாட்டினார்.

அயோத்தி,

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என பா.ஜனதாவும், பிரதமர் மோடியும் வாக்குறுதி அளித்து இருந்தனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, ராமர் கோவில் கட்டும் பிரச்சினையில் மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது.

இதற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தும் வகையில் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே, தனது மனைவி ராஷ்மி, மகன் ஆதித்யா மற்றும் கட்சியினருடன் நேற்று முன்தினம் அயோத்திக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், உள்ளூர் கோவில்களிலும் வழிபாடு நடத்தினார்.

இந்த பயணத்தின் 2-வது நாளாகிய நேற்று ராம ஜென்மபூமியில் உள்ள ராம் லல்லா கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:-

தேர்தல் சமயத்தில் சிலர் (பா.ஜனதாவினர்) ‘ராம்... ராம்...’ என்று கூறுகின்றனர். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் தூங்கி விடுகின்றனர். அயோத்தியில் எப்போது ராமர் கோவில் கட்டப்படும்? என உலகம் முழுவதும் இந்துக்கள் காத்திருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் கோர்ட்டுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று நீங்கள் (மோடி) விரும்பினால், ஏன் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தீர்கள்? ராமர் கோவில் விவகாரத்தில் போலி வாக்குறுதி அளித்ததை ஒப்புக்கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள். இந்துக்களின் உணர்வுகளை வைத்து யாரும் விளையாடக்கூடாது என்பதை நினைவுபடுத்தவே இங்கு நான் வந்திருக்கிறேன்.

ராமர் கோவில் கட்டுவதற்கு தேவையான அனைத்து அரசியல்சாசன வாய்ப்புகளையும் பரிசீலிப்போம் என தேர்தல் பிரசாரத்தின் போது நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் இந்த 4½ ஆண்டுகால ஆட்சியில் நீங்கள் எதையும் செய்யவில்லை. பணமதிப்பு நீக்கத்துக்கு கூட கோர்ட்டுக்கு சென்றீர்கள். ஆனால் ராமர்கோவில் விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறீர்கள்.

ராமர் கோவில் கட்டுவதற்காக அவசர சட்டம் கொண்டு வாருங்கள், நாங்கள் ஆதரவு தருகிறோம். ராமர் கோவில் கட்டுவதற்கு என்ன நடவடிக்கை எல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் மேற்கொள்ளுங்கள். ஆனால் விரைவில் ராமர் கோவில் கட்ட வேண்டும்.

இந்த அரசு மிகுந்த வலிமையானதாக இருந்தாலும், நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரின் விருப்பத்தை நிறைவேற்ற தவறிவிட்டது. ராமர் கோவில் கட்டவில்லை என்றால் இந்த அரசு நீடிக்காது. ஆனால் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், இல்லாவிட்டாலும் என்ன விலை கொடுத்தாவது அயோத்தியில் ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

உத்தவ் தாக்கரே அயோத்தி வரும்போது, புனே நகரில் அமைந்துள்ள சிவநேரி கோட்டையில் இருந்து ஒரு பானை நிறைய மண் எடுத்து வந்திருந்தார். அதை நேற்று ராம ஜென்மபூமியில் வைத்து இந்து சாமியாரிடம் அவர் ஒப்படைத்தார். அவருடன் சிவசேனா கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்ட தலைவர்களும் வந்திருந்தனர்.



Next Story