நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் அமளி - புத்தாண்டிலாவது அமைதி காக்க சபாநாயகர் வேண்டுகோள்


நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் அமளி - புத்தாண்டிலாவது அமைதி காக்க சபாநாயகர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 31 Dec 2018 11:00 PM GMT (Updated: 31 Dec 2018 8:27 PM GMT)

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். புத்தாண்டிலாவது அமைதி காக்குமாறு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியவுடன், வழக்கம்போல் கேள்வி நேரம் தொடங்கியது. சற்று நேரத்தில், காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் சபையின் மையப்பகுதியில் திரண்டனர்.

காங்கிரஸ் எம்.பி.க்கள், ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தியும், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் கோஷமிட்டனர்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர். அவர்களின் அமளிக்கு இடையே 50 நிமிடம் கேள்வி நேரம் நீடித்தது. பின்னர், சபையை 10 நிமிடம் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

பின்னர், சபை கூடியபோது, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நிதி ஒதுக்க மசோதாவை தாக்கல் செய்தார். அதன் மீது நடந்த விவாதத்தில் பலர் பேசினர்.

பிறகு, ஆங்கில புத்தாண்டான இன்று விடுமுறை விடுவது குறித்து சபையில் உறுப்பினர்களிடம் சபாநாயகர் கருத்து கேட்டார். அப்போது, ஆளும் கட்சி தரப்பில், இன்று பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர் களோ, விடுமுறை விட வேண்டும் என்று கூறினர். இறுதியில், புத்தாண்டுக்கு சபை விடுமுறை என்று சபாநாயகர் அறிவித்தார்.

மேலும், சபாநாயகர் சுமித்ரா மகாஜன், புத்தாண்டிலாவது சபையின் மையப்பகுதிக்குள் நுழைவதை உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “இந்த ஆண்டின் கடைசி நாள் இது. சபையின் மையப்பகுதியில் நுழைவதும் இதுவே கடைசி நாளாக இருக்கட்டும்” என்று அவர் கூறினார்.


Next Story