டி.டி.வி.தினகரன் மீதான அமலாக்கத்துறை வழக்கில் ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


டி.டி.வி.தினகரன் மீதான அமலாக்கத்துறை வழக்கில் ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Feb 2019 9:30 PM GMT (Updated: 2019-02-19T01:21:21+05:30)

டி.டி.வி.தினகரன் மீதான அமலாக்கத்துறை வழக்கில் ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

டி.டி.வி.தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அவருக்கு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ்கன்னா அமர்வில் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், தினகரனுக்கு ஆவணங்களை வழங்கினால் அதை திரிக்க வாய்ப்பு உள்ளது, அவை மிக முக்கிய ஆவணங்கள் என்பதால் அதை கொடுக்க இயலாது என வாதாடப்பட்டது. டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, ஆவணங்களின் ஆதாரம் உண்மையானதா என்பதை உறுதிபடுத்த ஆவணங்களை தரவேண்டும் என்றும், சென்னை கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

நீதிபதிகள், ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும், சென்னை பொருளாதார குற்றவியல் கோர்ட்டு விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அமலாக்கத்துறையின் மனுவுக்கு 4 வாரங்களில் டி.டி.வி.தினகரன் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story