ப.சிதம்பரம் மனைவி, மகனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்: வருமான வரித்துறை மனு மீது பதிலளிக்க உத்தரவு


ப.சிதம்பரம் மனைவி, மகனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்: வருமான வரித்துறை மனு மீது பதிலளிக்க உத்தரவு
x
தினத்தந்தி 17 April 2019 3:26 AM IST (Updated: 17 April 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கருப்பு பணம் தடுப்பு வழக்கில் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோரிடம் இங்கிலாந்து நாட்டில் ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்புள்ள இரண்டு சொத்துகளும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்தும் எப்படி வாங்கப்பட்டது? என்று விளக்கம் கோரி கருப்பு பணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

அவர்களுக்கு எதிராக எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் வருமான வரித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதி நளினி சிதம்பரம் உள்பட 3 பேருக்கு எதிராக வழக்கு தொடர வருமான வரித்துறை இயக்குனர் அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்தது. 3 பேருக்கு எதிராக எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் ரத்துசெய்து உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக வருமான வரித்துறை தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ்கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து, நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வருமான வரித்துறை மனு மீது பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


Next Story