“காங்கிரஸ் ஆட்சியின் போதும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது,” -மன்மோகன் சிங்


“காங்கிரஸ் ஆட்சியின் போதும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது,” -மன்மோகன் சிங்
x
தினத்தந்தி 2 May 2019 9:33 AM GMT (Updated: 2 May 2019 11:14 AM GMT)

காங்கிரஸ் ஆட்சியின் போதும் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த போது பல்வேறு கால இடைவெளிகளில் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது, எங்களைப் பொறுத்தவரையில் ராணுவ நடவடிக்கை என்பது ஒரு வியூக நடவடிக்கையாக இருந்தது, இந்தியாவிற்கு எதிரான படைகளுக்கு எதிராகவே மேற்கொண்டோம், ஆனால் அதனை வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தவில்லை என காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கூறியுள்ளார். 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. ராணுவம் மற்றும் ராணுவ நடவடிக்கையை பிரசாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டாலும் அது தொடர்கிறது. பா.ஜனதாவின் கூட்டத்தில் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவம் மற்றும் ராணுவ நடவடிக்கை பற்றியே பெரிதும் பேசப்படுகிறது. காங்கிரஸ் தேசிய பாதுகாப்பை தியாகம் செய்தது என்றும் குற்றம் சாட்டுகிறது. இந்தியப் படைகள் அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் அதை காங்கிரஸ் கேலி செய்கிறது எனவும் பா.ஜனதா பிரசாரம் செய்து வருகிறது. 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமான பேட்டியை இதுதொடர்பாக கொடுத்துள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசியுள்ள மன்மோகன் சிங், நாங்கள் ஒருபோதும் ராணுவ நடவடிக்கையை ஓட்டுக்காக பயன்படுத்தவில்லை என ஸ்திரமாக கூறியுள்ளார். 

கேள்வி:- 2019 தேர்தலில் இறுதி கட்டத்தில் உள்ளோம். பா.ஜனதா பிரதமர் நரேந்திர மோடியை இந்தியா பார்த்துள்ள மிகவும் பலமான பிரதமர் என தாங்கி பிடிக்கிறது. மேலும் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒரு தீர்க்கமான பதிலை அளித்தவர் என்கிறது. இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பதற்காக மோடி மட்டுமே வலுவான திறனை கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். சிலர் இந்திரா காந்தி மற்றும் வங்காளதேசத்தை உருவாக்குவதில் அவருடைய பங்குடன் பிரதமர் மோடியை ஒப்பீடு செய்கிறார்கள். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு குறித்த சமரசம் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டில் மிகவும் பாதுகாப்பான தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு துணிச்சலான நம்முடைய 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இதுஒரு தீவிர புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு தோல்வியாகும்  சி.ஆர்.பி.எப் மற்றும் பி.எஸ்.எப் ஆகியவை சிப்பாய்களை வான்வழியாக மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தன, ஆனால் மோடி அரசாங்கம் மறுத்துவிட்டது.
 
பயங்கரவாத அமைப்பின் வீடியோ எச்சரிக்கையில் மோடி அரசு கண்களை மூடிக்கொண்டு இருந்தது. தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கையை விடுத்தும் அதனை மோடி அரசு புறக்கணித்தது. கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் பாம்பரே, உரி, பதன்கோட், குர்தாஸ்பூர், சஞ்வான் போன்ற ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் அமர்நாத் யாத்திரையிலும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.  பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட போது விசாரணை செய்ய பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மோடி அரசாங்கத்தால் அழைக்கப்பட்டது. இது மிகப்பெரிய வியூக தவறாகும். அப்போது நம்முடைய பாதுகாப்பு படைகளின் நம்பிக்கை சிதைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பா.ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் சந்தர்ப்பவாத கூட்டணி அரசாங்கத்தின் காரணமாக ஜம்மு காஷ்மீர் உள்துறை பாதுகாப்பு மோசமான சூழ்நிலை மற்றும் பாகிஸ்தான் கொள்கையில் ஒரு மோசமான தோல்வியை காட்டுகிறது.
   
உங்களிடம் ஒன்றை தெளிவாக எடுத்துரைக்க விரும்புகிறேன், ஒவ்வொரு எச்சரிக்கைக்கும் பதிலடியை கொடுக்க நம்முடைய பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. எங்களுடைய ஆட்சியின் போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது.  பல்வேறு கால இடைவெளிகளில் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது, எங்களைப் பொறுத்தவரையில் ராணுவ நடவடிக்கை என்பது ஒரு வியூகமான நடவடிக்கையாக இருந்தது, இந்தியாவிற்கு எதிரான படைகளுக்கு எதிராகவே மேற்கொண்டோம், ஆனால் அதனை வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தவில்லை. கடந்த 70 ஆண்டுகளில் அதிகாரத்தில் இருக்கும் ஒரு அரசாங்கம் தோல்வியிலிருந்து தப்பித்துக்கொள்ள நமது ஆயுதப்படைகளின் சக்திக்கு பின்னால் மறைந்துக்கொண்டது கிடையாது. நம்முடைய ஆயுதப்படைகளின் நடவடிக்கையை அரசியல்மயமாக்கும் முயற்சியானது மிகவும் வெட்கக்கேடானது,  ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

 பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு, கிராமப்புற இன்னல்கள் மற்றும் முறைசாரா துறை ஆகியவற்றில் மோடி அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்பாட்டால் பெரும் தோல்வியை தழுவியுள்ளது, இவற்றில் இருந்து கவனத்தை திசைத்திருப்பவே ராணுவம் இழுக்கப்படுகிறது. வங்காளதேச விடுதலைப் போர் மற்றும் 1971-ல் இந்திரா காந்தியின் அரசியல் செயல்பாடு அல்லது 1965 போர் மற்றும் ஸ்ரீலால் பகதூர் சாஸ்திரியின் அரசியல் செயல்பாடு என்பது மிகவும் முக்கியமான தருணமாகும், தீர்க்கமான ஒரு தலைமையாகும். அவர்களின் பெருமையை இப்போது ஆட்சியில் இருப்பவர்களுடன் ஒப்பீடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்போதைய தலைவர்கள் தங்கள் உயர்மட்ட இராஜதந்திரப் பாத்திரங்களுக்கு பாராட்டப்பட்டனர் மற்றும் இப்பகுதியின் புவியியலை மாற்றியமைக்க வழிவகுத்தனர். இந்திரா காந்தியோ, அதற்கு முன்னதாக ஆட்சியில் இருந்தவர்களோ இந்திய ராணுவப் படைகளின் வெற்றியை தனக்கானதாக எடுத்துக்கொண்டதே கிடையாது.

கேள்வி:- 26/11 மும்பை தாக்குதலில் உங்களுடைய அரசின் நடவடிக்கையானது போதிய அளவுக்கு வலுவானதாக இருந்தது இல்லை என்று பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் உங்களை தாக்கி பேசுகிறார்கள்.  திரும்பிப் பார்த்தால், நீங்கள் வித்தியாசமான நடவடிக்கை எதாவது மேற்கொண்டீர்களா? 

பதில்:-உண்மைகள் மறைக்கப்படும் போது, யார் வேண்டுமென்றாலும் வரலாற்றை மறுபரிசீலனை செய்ய முடியும்.  நாங்கள் ராணுவ தண்டனை நடவடிக்கைகளுக்கு தயாராக இல்லை என்று கூறப்படுவதற்கு நான் உடன்படவில்லை. இருப்பினும், பல்வேறு புவிசார் அரசியல் நிலைமைகள் வெவ்வேறு பதில்களை கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத மையமாக தனிமைப்படுத்தவும், இராஜதந்திர ரீதியாக அம்பலப்படுத்தவும் எங்கள் பதில் இருந்தது, பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க சர்வதேச சமூகத்தை அணிதிரட்டியது. இதில் நாங்கள் வெற்றியையும் பதிவு செய்தோம். மும்பை தாக்குதல் நடந்த 14-வது நாள் மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்டு தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கையை மேற்கொண்டோம், சீனாவின் ஒப்புதலையும் பெறச்செய்தோம். ஹபீஸ் சயீத் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நெருக்கடியை கொடுக்கவும், அவனுடைய தலைக்கு 10 மில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்யவும் அமெரிக்காவிற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மற்றும் ஒரு சூத்திரதாரியான டேவிட் ஹெட்லிக்கு காங்கிரஸ் ஆட்சியின் போது 2013-ம் ஆண்டு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை பொருளாதார தடை லிஸ்டில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்தது. அதனால் லஷ்கரின் செயல்பாடு மங்கவும் செய்தது.

சர்வதேச சமூகத்தில் லஷ்கருக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை நாங்கள் இன்னும் சிறப்பாக செய்துள்ளோம். சவூதி அரேபியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் ஒரு பெரும் ஒப்பந்தத்துடன் இணைந்து செயல்பட்டன. பாகிஸ்தானுக்கு வெளியே பயணம் செய்த பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஹர்கத்-உல் ஜிஹாத் அல்-இஸ்லாமி தலைவனும், 26/11 தாக்குதலை நடத்திய ஷேக் அப்துல் குவாஜா கொழும்புவில் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டான். ஜனவரி 2010-ல் முறையாக கைது செய்யப்பட்டார். சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், ஜூலை 2012-ல் டெல்லி விமான நிலையத்தில் ஜாய்புதீன் அன்சாரி கைது செய்யப்பட்டார். 26/11 தாக்குதலுக்குப் பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் (NCTC) என்ற கருத்தையும் தூண்டியது, ஆனால், அப்போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்த யோசனையை எதிர்த்தார். உளவுத்துறை தகவலை இந்திய பாதுகாப்பு படைகள் இடையே பகிரவும், சேமிக்கவும் எங்கள் அரசுகொண்டுவந்த திட்டத்தை மோடி அரசு கிடப்பில் போட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசியுள்ளார். 

Next Story