மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற வாய்ப்பு...!


மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற வாய்ப்பு...!
x
தினத்தந்தி 28 May 2019 6:55 AM GMT (Updated: 28 May 2019 7:20 AM GMT)

2021- இல் மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

புதுடெல்லி,

அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வென்றது.  இதற்கு அடுத்தப்படியாக 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்று மக்களவையில், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கூட பெற முடியாத நிலையில் உள்ளது.

கடந்த முறை, மோடி அரசு மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த போதிலும், மாநிலங்களவையில் அக்கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை. இதனால், முத்தலாக் மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் மோடி அரசு  தவித்தது. இந்த சூழலில், விரைவில் மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெறும் என கூறப்படுகிறது. 

ராஜ்யசபாவில் மொத்தமாக 250 இடங்கள் உள்ளன. அதில் பாஜக தலைமையிலான கூட்டணிக்குத் தற்போது 102 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிக்கு 65 இடங்கள் உள்ளன. பெரும்பான்மை பெற 124 இடங்கள் தேவைப்படும்.  ராஜ்யசபாவில் இந்த ஆண்டு 10 இடங்கள் காலியாகும். அடுத்த ஆண்டு 72 இடங்கள் காலியாகும். 2020- ஆம் ஆண்டில் காலியாகும் 10 மாநிலங்களவை இடங்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவையாகும். அங்கு பாஜக-வுக்குப் பெரும்பான்மை உள்ளது. இதனால் 10-ல் 9 இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளது. 

உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் இருக்கும் 80 இடங்களில் பாஜக கூட்டணி 64-ஐ கைப்பற்றியது. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் 15 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி ஒன்றில்தான் வெற்றி பெற்றது.  பாஜக தற்போது ஆட்சியில் இருக்கும் மாநிலங்களான மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் உள்ளிட்டவைகளில் இந்த ஆண்டு முடிவில் சட்டமன்றத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த அனைத்து மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால், ராஜ்யசபாவில் அக்கட்சியால் பெரும்பான்மை பெற முடியும். எனவே,  2021-இல் மாநிலங்களவையில், தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெறுவதன் மூலம் பாஜக, மசோதாக்களுக்கு சுலபமாக ஒப்புதல் பெற முடியும். குறிப்பாக முத்தலாக் மசோதா, குடியுரிமை மசோதா போன்ற மசோதாக்களை பாஜக அரசு நிறைவேற்ற முடியும். 

Next Story