சோனியா காந்தி பிரசவத்தின்போது உடன் இருந்து கவனித்த நர்சுடன் ராகுல் காந்தி சந்திப்பு


சோனியா காந்தி பிரசவத்தின்போது உடன் இருந்து கவனித்த நர்சுடன் ராகுல் காந்தி சந்திப்பு
x
தினத்தந்தி 10 Jun 2019 4:15 AM IST (Updated: 10 Jun 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

சோனியா காந்தி பிரசவத்தின்போது உடன் இருந்து கவனித்த நர்சை ராகுல் காந்தி சந்தித்தார். மேலும் பழைய நினைவுகளை கேட்டு வியந்தார்.

கோழிக்கோடு,

நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றார். அத்தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல அவர் 3 நாள் பயணமாக அங்கு சென்றார். 3-வது நாளான நேற்று கோழிக்கோடு நகரில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் ராகுல் காந்தி தங்கி இருந்தார்.

அங்கு அவரை ஓய்வு பெற்ற நர்சு ராஜம்மா விவாதில் (வயது 72), அவருடைய கணவர், பேரக்குழந்தைகள் ஆகியோர் சந்தித்தனர். கடந்த 1970-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி, டெல்லியில் உள்ள ஹோலி பேமிலி ஆஸ்பத்திரியில் ராகுல் காந்தி பிறந்தபோது அவரை முதன்முதலில் கைகளில் தூக்கியவர்களில் ராஜம்மாவும் ஒருவர் ஆவார்.

அவர் அப்போது அந்த ஆஸ்பத்திரியில் பயிற்சி நர்சாக பணியாற்றி வந்தார். ராகுல்காந்தியின் தாயார் சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்த மருத்துவ குழுவில் ராஜம்மாவும் இடம்பெற்று இருந்தார். ராகுல் பிறந்தவுடன் ஆஸ்பத்திரியில் அவரை கவனிக்கும் பொறுப்பை ராஜம்மாதான் ஏற்றிருந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, அவர் இந்தியாவில் பிறந்ததை நேரடியாக பார்த்தவள் என்ற உண்மையை ராஜம்மா தெரிவித்தார்.

இத்தகைய பின்னணி கொண்ட ராஜம்மாதான், ராகுல் காந்தியை நேற்று சந்தித்தார். அப்போது அவருக்கு மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. ராஜம்மாவை ராகுல் காந்தி கட்டிப்பிடித்து அவரது கைகளை பற்றிக்கொண்டார். ராகுல் காந்தி பிறந்ததையும், அவரை கைகளில் தூக்கியதையும் ராஜம்மா நினைவுகூர்ந்தபோது, அதை ராகுல் காந்தி புன்னகையுடன் ஆர்வமாக கேட்டுக்கொண்டார். ராஜம்மா மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

தன் கைப்பட தயாரித்த பலாப்பழ சிப்ஸ் மற்றும் இனிப்புகளை ராகுல்காந்திக்கு ராஜம்மா வழங்கினார். அவற்றை பெற்றுக்கொண்ட ராகுல், மீண்டும் அவரை சந்திப்பதாக உறுதி அளித்தார்.

பின்னர், நிருபர்களிடம் பேசிய ராஜம்மா, “ராகுல் காந்தியை சந்தித்ததற்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு பரிசு தரவேண்டும் என்று தோன்றியதால், சிப்ஸ் மற்றும் இனிப்புகளை கொடுத்தேன்” என்றார்.

இந்த சந்திப்பு பற்றிய தகவலை ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் ‘டுவிட்டர்’ பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டது.


Next Story