இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் ‘வளர்ச்சி மற்றும் எதிர்கால நலன் சார்ந்த பட்ஜெட்’ - பிரதமர் மோடி பாராட்டு


இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் ‘வளர்ச்சி மற்றும் எதிர்கால நலன் சார்ந்த பட்ஜெட்’ - பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 6 July 2019 5:00 AM IST (Updated: 6 July 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட், வளர்ச்சி மற்றும் எதிர்கால நலன் சார்ந்தது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

புதுடெல்லி,

2019-20-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முதல் முறையாக தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டை பிரதமர் மோடியும் பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘மத்திய பட்ஜெட் குடிமக்கள் நலன் சார்ந்தது; வளர்ச்சி சார்ந்தது; அத்துடன் எதிர்கால நலன் சார்ந்தது. இது ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதுடன், இளைஞர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தையும் வழங்கும். சுற்றுச்சூழல், பசுமை மற்றும் தூய்மை எரிசக்திக்கான களத்தில் கவனம் செலுத்தியிருக்கும் வகையில் இது ஒரு பசுமை பட்ஜெட் எனவும் கூறலாம்’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் கொள்கைகள் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களை நாட்டின் வளர்ச்சிக்கான அதிகாரபீடமாக மாற்றும் என்று கூறிய பிரதமர் மோடி, வேளாண் துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை பட்ஜெட் கோடிட்டு காட்டி இருப்பதாகவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான வழிவகையை காட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அமித்ஷா புகழாரம்

இதைப்போல உள்துறை மந்திரி அமித்ஷாவும் மத்திய பட்ஜெட்டை எதிர்கால நலன் சார்ந்தது என வெகுவாக பாராட்டினார்.

இது குறித்து அவர் கூறுகையில், புதிய இந்தியாவுக்கான இந்த பட்ஜெட், இந்தியாவின் வளர்ச்சி தொடர்பான பிரதமர் மோடியின் பார்வைகளை தெளிவாக எதிரொலிக்கிறது. இதில் விவசாயிகளின் வளம், ஏழைகளின் கண்ணியமான வாழ்வு, நடுத்தர மக்கள் தங்கள் உழைப்பின் பலனை பெறுதல், இந்திய தொழில்துறைகள் ஊக்கம் பெறுதல் போன்றவை உள்ளடங்கி இருக்கிறது. உண்மையிலேயே இது ஒரு நம்பிக்கை மற்றும் அதிகாரமளித்தல் பட்ஜெட்’ என்று தெரிவித்தார்.

1 More update

Next Story