இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட தபால் ஊழியர் தேர்வு ரத்து - தமிழ் உள்பட மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு


இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட தபால் ஊழியர் தேர்வு ரத்து - தமிழ் உள்பட மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 17 July 2019 12:15 AM GMT (Updated: 16 July 2019 10:57 PM GMT)

இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட தபால் ஊழியர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. தமிழ் உள்பட மாநில மொழிகளில் தேர்வு புதிதாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தபால் துறையில் காலியாக இருக்கும் தபால்காரர் உள்பட 4 வகையான பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 14-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு தமிழ் உள்பட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இத்தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும்தான் எழுத முடியும் என்று கடந்த 11-ந் தேதி திடீரென அறிவிப்பு வெளியானது.

இதனால், தமிழ்நாட்டில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மையங்களில் அவர்கள் தேர்வை எழுதியபோதும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தேர்வுக்கு ஒரு நாள் முன்னர், இந்த பிரச்சினை தொடர்பாக சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தபால் துறை தேர்வுக்கு தடை இல்லை என்றும், தேர்வு முடிவை வெளியிட தடை விதிப்பதாகவும் அறிவித்தனர்.

மேலும், தபால் துறை தேர்வை இருமொழிகளில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் தபால் துறை தேர்வு நடத்தப்படுவதற்கு தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்ற மாநிலங்களவையில், நேற்று முன்தினம் இப்பிரச்சினையை அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பினர்.

இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாக, மாநிலங்களவையில் தபால் துறை தேர்வு பிரச்சினை எழுப்பப்பட்டது. காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியவுடன், அ.தி.மு.க. உறுப்பினர்கள் இதுதொடர்பாக கோஷங்களை எழுப்பினர். கேள்விகள் தமிழில் இல்லாததால், தபால் துறை தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களும் அதே கோரிக்கையை எழுப்பி கோஷமிட்டனர்.

அப்போது, சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, “திங்கட்கிழமை இதே பிரச்சினையை அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பினர். இந்த கோரிக்கையை ஏற்குமாறு மத்திய அரசுக்கு நான் உத்தரவிட முடியாது. அதற்கு விதிகளில் இடம் இல்லை. அப்படி செய்வது நியாயமும் அல்ல” என்று கூறினார்.

உறுப்பினர்களை அவரவர் இருக்கைகளுக்கு செல்லுமாறு அவர் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டார். ஆனால், அதை யாரும் கேட்கவில்லை. இதனால், முதலில் நேரடி ஒளி பரப்பை நிறுத்தச்சொன்ன வெங்கையா நாயுடு, பின்னர், சபையை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

பகல் 12 மணிக்கு சபை கூடியபோது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் பிரச்சினை எழுப்பினர். அதற்கு சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், கேள்வி நேரத்தை நடத்த விடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட தொடங்கினர். அவர்களுடன் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர். “தேர்வை ரத்து செய்” என்று கோஷமிட்டனர்.

அதற்கு சபை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், “மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரியிடம் சபைத்தலைவர் இதுகுறித்து பேசி உள்ளார். புதன்கிழமை (இன்று) சபையில் விளக்கம் அளிக்க மந்திரி ஒப்புக்கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார். நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி வி.முரளதரனும் அதே கருத்தை கூறினார். இருப்பினும், அமளி நீடித்ததால், சபையை 15 நிமிட நேரத்துக்கு ஹரிவன்ஷ் ஒத்திவைத்தார்.

அதற்கு பிறகு சபை கூடியபோதும், தமிழக உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட தொடங்கினர். இந்த தடவை அவர்களுடன் காங்கிரஸ் உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர். இதனால், சபையை பிற்பகல் 2 மணி வரை ஹரிவன்ஷ் ஒத்திவைத்தார்.

பிற்பகல் 2 மணிக்கு சபை கூடிய நிலையில், அமளி காரணமாக, 30 நிமிட நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர், சபை கூடியபோது, மத்திய சட்டம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் சபைக்கு வந்தார். தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டை சேர்ந்த என்னுடைய நண்பர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த சபையில் சில குறிப்பிட்ட பிரச்சினைகளை எழுப்பி உள்ளனர். அந்த பிரச்சினையை உடனே ஆய்வு செய்தேன். அதன்படி, கடந்த 14-ந் தேதி நடந்த தபால் துறை தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் இந்த தேர்வு புதிதாக நடத்தப்படும்.

இந்த சபைக்கும், நாட்டுக்கும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகள் மீதும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மரியாதை வைத்துள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றியபோது, தமிழ் மொழியின் ஆழத்தை நானே உணர்ந்தேன். எனவே, அனைத்து மாநில மொழிகளையும் மதிக்கும் இந்த அரசின் உறுதிப்பாடு முழுமையானது, உண்மையானது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

அவரது விளக்கம், தமிழக உறுப்பினர்களுக்கு திருப்தி அளித்தது. அவருக்கு நன்றி தெரிவித்து பேசினர்.

அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன், “கடந்த 2 நாட்களாக உருவான சூழ்நிலையால், எங்களுக்கே உரிய பாணியில் பிரச்சினை எழுப்பும் துரதிருஷ்டவசமான நிலைமைக்கு தள்ளப்பட்டோம். எனது கட்சி உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.நவநீத கிருஷ்ணன், பிரதமர் மோடிக்கும், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், “மத்திய அரசின் அனைத்து துறைகளும் மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும்” என்று யோசனை தெரிவித்தார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, “இனிமேல் நடக்கும் மத்திய அரசு தேர்வுகள் மும்மொழி கொள்கைப்படி நடத்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.


Next Story