லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்ற சீனா எதிர்ப்பு: இந்தியா நிராகரிப்பு


லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்ற சீனா எதிர்ப்பு:  இந்தியா நிராகரிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2019 1:32 PM GMT (Updated: 6 Aug 2019 11:16 PM GMT)

லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்ற சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரை பிரித்து லடாக் யூனியன் பிரதேசம் அமைப்பதற்கு சீனா நேற்று எதிர்ப்பு தெரிவித்தது. சீன பிராந்தியத்தை இந்தியா சேர்த்துக்கொள்வதற்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்தார்.

ஆனால், சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்துவிட்டது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது:-

இந்திய பகுதியான லடாக்கில், யூனியன் பிரதேசம் அமைப்பது, இந்தியாவின் உள் விவகாரம். மற்ற நாடுகளின் உள் விவகாரம் குறித்து நாங்கள் பேசுவது இல்லை. அதுபோல், மற்ற நாடுகளும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

சீனாவுடனான எல்லை பிரச்சினையை பொறுத்தவரை, நியாயமான, ஏற்கத்தக்க தீர்வை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளோம். அத்தகைய தீர்வு ஏற்படும்வரை, எல்லையில் அமைதியை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story