அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வாதம்


அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வாதம்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:15 PM GMT (Updated: 14 Aug 2019 9:50 PM GMT)

அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்று ராம்லல்லா அமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை பிரிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது. நேற்று 6-வது நாள் விசாரணை நடைபெற்றது.

அப்போது ராம் லல்லா தரப்பில் 2-வது நாளாக வாதத்தை தொடர்ந்த மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் அயோத்தி மற்றும் அங்கு ராமருக்காக எழுப்பப்பட்ட கட்டிடங்கள், கோவில்கள் ஆகியவை குறித்து பல்வேறு ஐரோப்பிய நூல்களில் இருந்து மேற்கோள்களை வாசித்து காட்டினார்.

அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு பாபர் அல்லது அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக கூறப்படும் மசூதி பற்றிய குறிப்புகள் அடங்கிய நூலையும் வாசித்தார். அந்த நூலின் ஆசிரியர், தான் எதையும் நேரில் பார்க்கவில்லை என்றாலும் இவை குறித்து கேள்விப்பட்டவற்றின் அடிப்படையில் அனைத்தையும் தெளிவாக விவரித்து இருப்பதாகவும் இந்த நூலில் உள்ள பல விஷயங்கள் நம்பகத்தன்மை கொண்டவை என்றும் கூறினார்.

தொடர்ந்து சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடுகையில், “பல்வேறு ஐரோப்பிய பயணிகள் எழுதிய நூல்களில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையில் கோவிலை இடித்ததாக கூறப்படுவது பாபரா? அல்லது அவுரங்கசீப்பா என்ற கேள்வி எழுகிறது. இந்த கோவில் யாரால் இடிக்கப்பட்டது என்பது குறித்து பல வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஆனால் இந்த கோவில் 1786-ம் ஆண்டுக்கு முன்பே இடிக்கப்பட்டுள்ளது என்பது வரலாற்று ஆதாரங்களால் தெளிவாக தெரிகிறது” என்று கூறினார்.

அப்போது நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறுக்கிட்டு, ‘பாபர்நாமா’ நூலில் இந்த விவகாரம் குறித்த எந்த பதிவும் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சி.எஸ்.வைத்தியநாதன், பாபர் தன் படைத்தளபதிக்கு அங்கு மசூதியை கட்டுமாறு உத்தரவிட்டார் என்று பதில் அளித்தார்.

உடனே, “அதற்கான ஆதாரம் உள்ளதா?” என்று நீதிபதி பாப்டே கேட்க அதற்கு சி.எஸ்.வைத்தியநாதன், “கல்வெட்டு குறிப்புகள் இது தொடர்பாக பலத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளன” என்று பதில் அளித்தார்.

அப்போது இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான், “இது பற்றிய குறிப்புகள் ‘பாபர்நாமா’ நூலில் கிடைக்கவில்லை” என்றார்.

இதைத்தொடர்ந்து சி.எஸ். வைத்தியநாதன் வாதாடுகையில் கூறியதாவது:-

அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அங்குள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் பாபர் அல்லது அவுரங்கசீப் ஆகிய இருவரில் ஒருவரால் கட்டப்பட்ட மற்றொரு கட்டிடம் எழுப்பப்பட்டு உள்ளது என்பது பல்வேறு நூல்களால் தெளிவாகிறது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாண்ட்கோமரி மார்ட்டின் என்ற பிரிட்டிஷ் சர்வேயர் எழுதிய ‘மாண்ட்கோமரி 1838’ என்ற நூலில், பாபர் கட்டிய மசூதி பற்றிய முதல் குறிப்பு கிடைக்கிறது.

அந்த நூலில் மசூதியில் உள்ள தூண்களின் படங்கள் உள்ளன. அவை இஸ்லாமிய கட்டிட பாணியை சேர்ந்தவை அல்ல. அவை கோவிலில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கலாம் அல்லது ராமர் வாழ்ந்த இடத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு இருக்கலாம்.

இந்த நூல்களை, சரித்திர உண்மைகளை நிரூபிக்கும் நோக்கில் நான் முன்வைக்கவில்லை. ஆனால் மக்களின் நம்பிக்கை மற்றும் அந்த இடத்தின் மீதான மதநம்பிக்கை சார்ந்த விஷயங்களின் அடிப்படையில் முன்வைக்க விரும்புகிறேன். இவற்றின் அடிப்படைகளை சார்ந்தே இந்த ஐரோப்பிய நூல்களும் எழுதப்பட்டு உள்ளன.

‘1854-ல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லைகள்’ என்ற மற்றொரு நூலில், “கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள நகருக்கு அருகில் ராமாயணத்தின் கதாநாயகனான ராமருடைய கோட்டையின் இடிபாடுகள் காணக் கிடைக்கின்றன” என்று எழுதப்பட்டு உள்ளது. ‘சைக்ளோபீடியா ஆப் இந்தியா’ என்ற நூலில், அங்கு மூன்று இந்து கோவில்கள் இருந்த இடத்தில் மூன்று மசூதிகள் உள்ளன என்று எழுதப்பட்டு உள்ளது.

அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவர் தாக்கல் செய்த தொல்பொருள் கணக்கெடுப்பு அறிக்கையிலும் இது குறித்து கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சி.எஸ்.வைத்தியநாதன் தொடர்ந்து வாதாடுகையில், சர்ச்சைக்குரிய இந்த இடத்தின் மீதான உரிமை மக்களின் நம்பிக்கை சார்ந்தது என்றும், இதனால் இந்த இடத்தை இரண்டாக அல்லது மூன்றாக பிரிக்க முடியாது என்றும் கூறினார்.

கோவிலின் இடிபாடுகள்

உடனே நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “இந்து மதம், புத்த மதம், சமண மதம், இஸ்லாமிய மதம் ஆகியவையும் இங்கு இருந்துள்ளன இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சி.எஸ்.வைத்தியநாதன் பதில் அளிக்கையில், அனைத்து மதங்களின் தாக்கமும் இங்கு இருந்துள்ளது என்றார்.

இதைத்தொடாந்து நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, சர்ச்சைக்குரிய இந்த இடம் குறித்து ஷியா மற்றும் சன்னி பிரிவினர் இடையே உள்ள கருத்து வேற்றுமை பற்றி கூறுமாறு மூத்த வக்கீல் ராஜீவ் தவானிடம் கேட்டுக் கொண்டார்.

அதற்கு ராஜீவ் தவான், “அந்த பிரச்சினை 1945-ல் நடைபெற்ற வழக்கு தொடர்பானது. 1989-ல் தொடரப்பட்ட வழக்கை இது பாதிக்காது. அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பில் சன்னி பிரிவினரின் நிலைப்பாடு பற்றி தெளிவு படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

பின்னர் சி.எஸ்.வைத்தியநாதன் தொடர்ந்து வாதாடுகையில், ஒரு மசூதிக்கு உரிய முக்கியமான அம்சங்கள் சர்ச்சைக்கு உரிய இடத்தில் காணக் கிடைக்கவில்லை என்றும், ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலின் இடிபாடுகள் மீது மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும், அது ஷரியத் சட்டப்படி சரியான முறையில் கட்டப்பட்டுள்ள மசூதி அல்ல என்பது தெளிவாகிறது என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story