ஆண், பெண் திருமண வயது வித்தியாசத்தை நீக்கலாமா? - மத்திய அரசு பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


ஆண், பெண் திருமண வயது வித்தியாசத்தை நீக்கலாமா? - மத்திய அரசு பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Aug 2019 10:21 PM GMT (Updated: 19 Aug 2019 10:21 PM GMT)

ஆண், பெண் திருமண வயதில் உள்ள வித்தியாசத்தை நீக்க வேண்டும் என்று கோரிய மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்கும்படி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது ஒரு ஆண் குறைந்தபட்சம் 21 வயது ஆன பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல பெண்ணுக்கு குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உள்ளது. இந்த சட்டபூர்வ திருமண வயதில் வித்தியாசம் ஏன்? என்பது குறித்து கேள்வி எழுப்பும் வகையில் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பா.ஜனதா தலைவரான வக்கீல் அஷ்வினிகுமார் உபாத்யாய் தாக்கல் செய்துள்ள அந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆண்களின் திருமண வயது 21 ஆக உள்ளது. ஆனால் பெண்களுக்கு திருமண வயது 18 என உள்ளது. இது அப்பட்டமான பாலின பாகுபாடு. சட்டபூர்வ திருமண வயதில் இந்த வித்தியாசம் இருப்பதும் ஒருவகையில் ஆணாதிக்கத்தின் அடிப்படை தான். இதில் அறிவியல் ரீதியிலான காரணம் எதுவும் இல்லை.

எனவே ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே சட்டபூர்வ திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Next Story