காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அழைப்பு - கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றது ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்


காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அழைப்பு - கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றது ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்
x
தினத்தந்தி 7 Oct 2019 11:34 PM IST (Updated: 7 Oct 2019 11:34 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திரும்பப் பெற்றதுடன், மீண்டும் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. மேலும் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராணுவ பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுடன், முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு அரசு நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் இன்று அறிவித்துள்ளார்.

மேலும், “காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாகவும், இந்த உத்தரவு வரும் 10-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.

முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசகர்கள் மற்றும் தலைமைச் செயலருடன் ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் திட்ட ஆணையம் மற்றும் வீட்டு வசதி  நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர்களும் பங்கேற்றனர்.


Next Story