டெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல்: உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி


டெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல்: உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 5 Nov 2019 10:30 PM GMT (Updated: 2019-11-06T03:16:20+05:30)

டெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல் சம்பவத்தில், உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுந்துள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் திஸ் ஹசாரி கோர்ட்டு வளாகத்தில் கடந்த 2-ந்தேதி வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்த ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வக்கீல்கள் படுகாயம் அடைந்தனர். இந்த மோதலை தொடர்ந்து வக்கீல்களும், போலீசாரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த சம்பவம் தொடர்பாக மவுனம் சாதிப்பது ஏன்? என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தகவல் தொடர்பு பொறுப் பாளர் ரன்தீப்சிங் சுஜ்வாலா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்தை போலீசார் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத தரம் தாழ்ந்த செயலாக உள்ளது. தலைநகரில் வக்கீல்களும், போலீசாரும் மோதலில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தபோது உள்துறை அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? டெல்லியில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்து அவர் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், டெல்லியில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து மக்களை யார் பாதுகாக்க போகிறார்கள்? எனக்கூறிய ரன்தீப்சிங் சுஜ்வாலா, இதுதான் பா.ஜனதா அரசு எங்களிடம் கூறிய புதிய இந்தியாவா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story