தேசிய செய்திகள்

டெல்லியின் காற்று மாசு பிரச்சினை: பஞ்சாப், அரியானா அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் + "||" + Delhi's air pollution problem: Supreme Court denounces Punjab, Haryana

டெல்லியின் காற்று மாசு பிரச்சினை: பஞ்சாப், அரியானா அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்

டெல்லியின் காற்று மாசு பிரச்சினை: பஞ்சாப், அரியானா அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு தொடர்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.
புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற பகுதிகளில் பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதே, இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.


இந்த பிரச்சினை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கு விசாரணையில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி இந்த வழக்கு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மேற்படி 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்களும் ஆஜராகி இருந்தனர். வழக்கின் விசாரணை தொடங்கியதும், இந்த பிரச்சினையில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சில கருத்துகளை வெளியிட்டார்.

அதாவது, ‘பஞ்சாப், அரியானா மாநிலங்களை தனித்தனி மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் காய்ந்த பயிர் கழிவுகளை குறிப்பிட்ட நாளில் எரித்துக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கினால் இந்த பிரச்சினை ஏற்படாது’ என்று கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், காற்று மாசுபாட்டால் மக்கள் இறப்பதற்கு அனுமதிக்க முடியுமா? நாடு 100 ஆண்டுகளுக்கு பின்னால் செல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த பிரச்சினைக்கு அரசையே பொறுப்பாக்க வேண்டும் என்றும் கூறினர்.

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வா? சாவா? பிரச்சினை இது என்று கூறிய நீதிபதிகள், காய்ந்த பயிர் கழிவுகளை ஒழிப்பதற்கு அரசு நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதற்கான தீர்வை விவசாயிகளின் கையில் விட முடியாது என்றும் தெரிவித்தனர்.

அப்போது பஞ்சாப் மாநில தலைமை செயலாளர், பயிர் கழிவுகளை அகற்ற தங்கள் மாநிலத்தில் 18 ஆயிரம் எந்திரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன என்றார். மேலும் காய்ந்த பயிர் கழிவுகளை வாங்குவதில் மத்திய அரசுக்கு உள்ள பொறுப்பு பற்றியும் விளக்க தொடங்கினார்.

உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஒருவர் மீது ஒருவர் பழியை மாற்றி மாற்றி சுமத்தும் பணியைத்தான் செய்கிறீர்கள். ஒரு தலைமை செயலாளராக உங்களால் ஏன் எதையும் செய்ய முடியவில்லை? ஏன் பஞ்சாயத்து அளவில் இந்த பயிர் கழிவுகளை விலைக்கு வாங்கி அழிக்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை?’ என கடிந்து கொண்டனர்.

பின்னர் அரியானா தலைமை செயலாளரை பார்த்து, உங்கள் மாநிலத்தில் ஏன் காய்ந்த பயிர் கழிவுகள் எரிக்கப்படுகின்றன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, ‘விவசாயிகளிடம் பயிர்களை பாதுகாப்பாக எரிப்பதற்கான எந்திரங்கள் உள்ளன’ எனவும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அரியானா தலைமை செயலாளர் கூறினார்.

அப்போது நீதிபதிகள், ‘விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காலம் கடந்து விட்டது. இப்போதைக்கு அவர்களிடம் இருந்து காய்ந்த பயிர் கழிவுகளை மாநில அரசு விலைக்கு வாங்குவதுதான் உடனடித்தேவை. அதற்கான நடவடிக்கையை தொடங்குங்கள்’ என்று அறிவுறுத்தினர்.

பின்னர் உத்தரபிரதேசம், டெல்லி மாநில தலைமை செயலாளர்களிடமும் இதைப்போல கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்து, அது தொடர்பாக 7 நாட்களுக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் வங்கிகள் இணைப்பை கண்டித்து ஊழியர்கள் தர்ணா
டெல்லி ஜந்தர்மந்தரில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. டெல்லியில் 43 பேரை பலி வாங்கிய தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு - நேற்றும் தீ பிடித்ததால் பரபரப்பு
டெல்லியில் 43 பேரை பலி வாங்கிய தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அந்த கட்டிடத்தில் நேற்று மீண்டும் தீ பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
3. உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் மீது தீவைப்பு, சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார்
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் , கோர்ட்டுக்கு செல்லும் வழியில் தீவைத்து எரிக்கப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. டெல்லியில் காற்றுமாசு மோசமான நிலையை நாளை அடையும் - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்
டெல்லியில் காற்றுமாசு மோசமான நிலையை நாளை அடையும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
5. டெல்லியில் இந்த ஆண்டு 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவு
டெல்லியில் இந்த ஆண்டு 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.