“குடியுரிமை சட்ட விவகாரத்தில் வன்முறையை தூண்டிவிடுகிறது” - காங்கிரஸ் மீது மோடி பரபரப்பு குற்றச்சாட்டு


“குடியுரிமை சட்ட விவகாரத்தில் வன்முறையை தூண்டிவிடுகிறது” - காங்கிரஸ் மீது மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Dec 2019 11:30 PM GMT (Updated: 2019-12-16T03:07:52+05:30)

ஜார்கண்டில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். அவர், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி வன்முறையை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டினார்.

ராஞ்சி,

ஜார்கண்டில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 5 கட்ட சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.

3 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 4-வது கட்ட தேர்தல் இன்று (16-ந் தேதி) 15 தொகுதிகளில் நடக்கிறது. 5-வது இறுதி கட்ட தேர்தல் 20-ந் தேதி 16 தொகுதிகளில் நடக்க உள்ளது.

இறுதி கட்ட தேர்தலை சந்திக்கிற தும்காவில் நேற்று நடந்த பாரதீய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் காங்கிரஸ் கட்சி இந்தியாவை இழிவுபடுத்த முயற்சிப்பதுடன், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் வன்முறையை தூண்டி விடுவதாகவும் குற்றம் சாட்டினார். குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்திருப்பதை அவர் நியாயப்படுத்தினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

முதல் முறையாக, பாகிஸ்தானின் அடிச்சுவட்டில் காங்கிரஸ் நடைபோட்டுள்ளது. இதைவிட அவமானகரமாக என்ன இருக்க முடியும்? உலகின் பிற பகுதிகளில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக இதுவரை எந்த இந்தியராவது ஆர்ப்பாட்டம் செய்தது உண்டா?

வட கிழக்கு மாநில மக்கள் வன்முறை போராட்டத்தை நிராகரித்து இருக்கிறார்கள். அமைதியான வழியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுகிறார்கள்.

நான் ஒரு சேவகன். இங்குள்ள மக்கள் முன்பாக பாரதீய ஜனதா கட்சியின் சாதனைகளை சொல்லத்தான் வந்திருக்கிறேன்.

இந்த மாநிலத்தை முன்னேற்றுவதற்கான வரைவு திட்டமோ, விருப்பமோ ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணியிடம் கிடையாது.

எதிர்க்கட்சியினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தங்களுக்காகவும், தங்களுடைய குடும்பத்துக்காகவும் அரண்மனைகளை கட்டி உள்ளனர். அவர்கள் மக்களின் கஷ்டங்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story