காஷ்மீரில் ‘சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும்’ - தேசிய மாநாடு கட்சி வலியுறுத்தல்


காஷ்மீரில் ‘சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும்’ - தேசிய மாநாடு கட்சி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jan 2020 7:59 PM GMT (Updated: 11 Jan 2020 7:59 PM GMT)

காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என தேசிய மாநாடு கட்சி வலியுறுத்தி உள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள முன்னணி அரசியல் தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். குறிப்பாக முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பல தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களை விடுவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட தங்கள் கட்சியின் மூத்த தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தேசிய மாநாடு கட்சி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்த தலைவரும் நாட்டை விட்டும், காஷ்மீரை விட்டும் வெளியேறமாட்டார்கள். எனவே கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து தலைவர்களையும் உடனடியாக விடுவித்து, தங்கள் அன்றாட அரசியல் நடவடிக்கைகளை தொடர அனுமதிக்க வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே பரூக் மற்றும் உமர் அப்துல்லாவை விடுவிப்பதற்கு மத்திய அரசுடன் அவர்கள் ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதையும் தேசிய மாநாடு கட்சி மறுத்து உள்ளது.

Next Story