கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; எடியூரப்பாவை சந்திக்க கடும் கட்டுப்பாடுகள் கர்நாடக அரசு அறிவிப்பு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்;  எடியூரப்பாவை சந்திக்க கடும் கட்டுப்பாடுகள் கர்நாடக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 16 March 2020 7:17 AM IST (Updated: 16 March 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெங்களூரு,

 சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. 

அதாவது வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்து பெங்களூருவில் குடியேறி ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் 3 லட்சம் பேர் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பெங்களூருவில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை கர்நாடக அரசு நேற்று அறிவித்தது. அதாவது பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரியின் அரசு இல்லமான காவேரி இல்லத்துக்கு வருபவர்கள் எளிதில் எடியூரப்பாவை சந்திக்க முடியாது. அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் கட்டுப்பாடுகளை பின்பற்றியே ஆகவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு இருப்பவர்கள் எடியூரப்பாவை சந்திக்க அனுமதி கிடையாது. மேலும் யாராக இருந்தாலும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொண்டுதான் வரவேண்டும், அவர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும், மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் முதல்-மந்திரியின் வீடு, அலுவலகம் முழுவதும் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். முதல்-மந்திரியின் அலுவலகம் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்று ஏதாவது உடல்நலக்குறைவு இருப்பின் உடனடியாக அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
1 More update

Next Story