உலக சுகாதார தினத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடும் “டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் நமது நன்றியை உறுதி செய்வோம்” - மோடி டுவிட்டர் பதிவு


உலக சுகாதார தினத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடும் “டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் நமது நன்றியை உறுதி செய்வோம்” - மோடி டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 7 April 2020 10:51 PM GMT (Updated: 7 April 2020 10:51 PM GMT)

உலக சுகாதார தினத்தில், கொரோனா வைரசுக்கு எதிராக முன்னிலையில் நின்று போராடுகிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு நமது நன்றியை உறுதி செய்வோம் என பிரதமர் மோடி செய்தி விடுத்துள்ளார்.

புதுடெல்லி, 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ந் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வந்தாலும் அதற்கு மத்தியிலும் உலக சுகாதார தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த நாளை, பெரும்பாலானவர்கள், கொரோனா வைரசுக்கு எதிராக தங்களது இன்னுயிரைக்கூட பணயம் வைத்து, முன்னிலையில் இருந்து போராடுகிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்களை கொண்டாடுவதற்கும், போற்றிப்புகழ்வதற்கும் பயன்படுத்தினர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் செய்திகளையும் வெளியிட்டனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி, டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இன்று (நேற்று) உலக சுகாதார தினம். நாம் நம் ஒருவருக்கு ஒருவர் நல்லதொரு ஆரோக்கியத்துக் காகவும், நல்வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கிறோம். அத்துடன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிரான போரில் துணிச்சலுடன் முன்னிலை வகித்து போராடுகிற டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் அனைவருக்கும் நமது நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

இந்த உலக சுகாதார நாளில் சமூக இடைவெளியை பரா மரித்தல் உள்ளிட்ட நடை முறைகளை பின்பற்றி வர உறுதி கொள்வோம். இது நமது வாழ்க்கையை மட்டுமல்ல, மற்றவர்களின் வாழ்க்கையையும் காக்கும்.

ஆண்டு முழுவதும் நமது உடல் தகுதிகளில் நாம் கவனம் செலுத்துவதற்கும், இந்த நாள் ஊக்குவிக்கட்டும். இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். இவ்வாறு அந்தப் பதிவுகளில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “இந்த உலக சுகாதார தினத்தன்று ஊரடங்கு, சமூக இடைவெளியை பராமரித்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பதின்மூலம், கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நாம் கூட்டு முயற்சியுடன் போராட உறுதி எடுத்துக்கொள்வோம். கொரோனா வைரசுக்கு எதிரான இந்தப் போரில் முன்வரிசையில் நின்று போராடுகிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குகிறவர்கள் அனைவருக் கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

Next Story