கொரோனாவை கட்டுப்படுத்தும் பிரச்சினையில் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு, ராகுல் காந்தி வேண்டுகோள்
கொரோனாவை கட்டுப்படுத்தும் பிரச்சினையில் மாநிலங்களுக்கு போதிய அதிகாரம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நேற்று காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெருந்தொற்று நோயான கொரோனாவை கட்டுப்படுத்துவற்காக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். கொரோனாவை எதிர்த்து போராட பிரதமர் அலு வலகத்தில் இருந்து எடுக்கும் நடவடிக்கைகள் மட்டுமே போதாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மாநிலங்களுக்கு போதிய அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும். மாநில முதல்-மந்திரிகள் மீது பிரதமரும், மாவட்ட கலெக்டர்கள் மீது முதல்-மந்திரிகளும் நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும். இல்லையேல் கொரோனா பாதிப்பு பேரழிவை ஏற்படுத்திவிடும். பிரதமர் அலுவலகத்தில் இருந்து மட்டும் நடவடிக்கை எடுத்தால் வெற்றி பெறாது.
வருகிற 17-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கை விலக்கிக்கொள்ள அல்லது நீட்டிக்க எந்த அளவுகோல் பயன்படுத்தப்படும் என்பதை மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். கொரோனா பரவலின் உச்சகட்டம் எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு அரசு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி உதவி திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்புகளை பாதுகாக்க முடியும்.
ஊரடங்கால் மக்கள் வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யாமல் ஊரடங்கை நீட்டிக்க முடியாது.
வெளிமாநில தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்துவது மனிதாபிமானமற்ற செயல் ஆகும். இந்த விஷயத்தில் தெளிவான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். ஏழைகளின் கையில் பணம் இருக்க வேண்டும். மத்திய அரசு, வெளிமாநில தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக தலா ரூ.7,500 செலுத்த வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Related Tags :
Next Story