கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்க லட்சக்கணக்கான ரூபாய் வாங்கும் தனியார் ஆஸ்பத்திரிகள்: கெஜ்ரிவால் கடும் எச்சரிக்கை


கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்க லட்சக்கணக்கான ரூபாய் வாங்கும் தனியார் ஆஸ்பத்திரிகள்: கெஜ்ரிவால் கடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2020 4:30 AM IST (Updated: 7 Jun 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்க லட்சக்கணக்கான ரூபாய் வாங்கும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லியில் சில தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகளை ஒதுக்க லட்சக்கணக்கான ரூபாய் வசூலிப்பதாகவும், அந்த ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில் 36 அரசு ஆய்வகங்களும், மற்றும் சில தனியார் ஆய்வகங்களும் கொரனோ பரிசோதனை நடத்தி வருகின்றன. டெல்லியில் உள்ள பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை எதுவும் இல்லை.

தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளுக்கு 20 சதவீத படுக்கைகளை ஒதுக்குவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக அந்த ஆஸ்பத்திரி நிர்வாகங்களுடன் அரசு பேசி வருகிறது.

ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுப்பதாகவும், மிகவும் வற்புறுத்தினால் கள்ள மார்க்கெட்டில் லட்சக்கணக்கான ரூபாய் வாங்கிக் கொண்டு அவர்களை அனுமதித்து படுக்கைகள் ஒதுக்குவதாகவும் தகவல் கிடைத்து உள்ளது. இதற்கு உதவியாக ஒரு கும்பல் செயல்படுவதாகவும், இந்த ஆஸ்பத்திரிகளுக்கு அரசியல் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த அரசியல்வாதிகள் அந்த ஆஸ்பத்திரிகளை காப்பாற்ற முடியாது.

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்க மறுக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீதும், இப்படி படுக்கைகளை கள்ள மார்க்கெட்டில் விற்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கைகள் நிலவரம் பற்றி அறிய டெல்லி அரசு ஒவ்வொரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் மருத்துவ அதிகாரிகளை அனுப்பி வைத்து ஆய்வு செய்யும் என்று கெஜ்ரிவால் கூறினார்.


Next Story