சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா: டெல்லி சுகாதாரத்துறை பொறுப்பு துணை முதல்-மந்திரியிடம் ஒப்படைப்பு


சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா: டெல்லி சுகாதாரத்துறை பொறுப்பு துணை முதல்-மந்திரியிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 19 Jun 2020 2:00 AM IST (Updated: 19 Jun 2020 12:59 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அம்மாநில சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்-மந்திரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுடெல்லி, 

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் அவர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷலிட்டி ஆஸ்பத்திரியில் கடந்த 16-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் நோய்த்தொற்று இல்லை என தெரியவந்தது. இதையடுத்து 24 மணி நேரத்துக்கு பிறகு 2-வது முறையாக சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவர் வகித்து வந்த சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. சத்யேந்திர ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உள்பட பிற துறைகளும் மணீஷ் சிசோடியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மந்திரி சத்யேந்திர சிங், கடந்த 14-ந் தேதி டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றிய உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story