திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 91 பேருக்கு கொரோனா


திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 91 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 July 2020 2:56 AM IST (Updated: 13 July 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 91 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது.

திருமலை, 

திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனில் நேற்று காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகள் கேட்கும் முகாம் நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பங்கேற்றுப் பேசியதாவது:-

திருமலை, திருப்பதியில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் தேவஸ்தான ஊழியர்கள் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை 700 பக்தர்களுக்கும், இந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை 1,943 பக்தர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொது தரிசனத்தில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். அன்று முதல் இந்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் கேட்டு 2 லட்சத்து 2 ஆயிரத்து 346 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 742 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 55 ஆயிரத்து 669 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரவில்லை.

அதேபோல் ஆன்லைனில் பதிவு செய்யாமல் நேரில் வந்து 97 ஆயிரத்து 216 பக்தர்கள் இலவச தரிசனத்தில் வழிபட டைம் ஸ்லாட் டோக்கன் பெற்றுள்ளனர். அதில் 85 ஆயிரத்து 434 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில் 11 ஆயிரத்து 782 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரவில்லை.

உண்டியல் வருமானமாக ரூ.16 கோடியே 73 லட்சம் கிடைத்தது. 13 லட்சத்து 36 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கல்யாண கட்டாக்களில் 82 ஆயிரத்து 563 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தி உள்ளனர். காணிக்கை தலைமுடி இறக்கும் பணியில் 430 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையானை வழிபட செல்லும் பக்தர்களுக்கு வசதியாக தரிசன வரிசையின்மேல் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பணிக்கு வரும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் கோவிலுக்குள் நுழையும்போது, அவர்களின் கைகளில் சானிடைசர் தெளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story