கொரோனா அதிகம் பாதித்த 10 மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை


கொரோனா அதிகம் பாதித்த 10 மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 11 Aug 2020 11:30 PM GMT (Updated: 11 Aug 2020 7:18 PM GMT)

கொரோனா அதிகம் பாதித்த 10 மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்திருக்கிறது. நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதைப்போல உயிரிழப்புகளும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளது.

நாட்டின் இத்தகைய கொரோனா பாதிப்பில் மராட்டியம், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 80 சதவீதத்துக்கும் அதிகமான நோயாளிகள் இந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

எனவே இந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்தினார். இதில் மராட்டியம், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், தெலுங்கானா, பீகார், குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய 10 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்றனர்.

இந்த மாநிலங்களில் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் பிரதமர் மோடி தலைமையில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்-மந்திரிகள் அனைவரும் பாராட்டினர்.

பின்னர் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இது அரசின் நடவடிக்கைகள் பயனுள்ளவை என நிரூபித்திருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசும், மாநிலங்களும் இணைந்து குழுவாக உழைக்க முடிகிறது.

தனிமைப்படுத்துதல், தொடர்பு கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு போன்றவை கொரோனாவுக்கு எதிரான பயனுள்ள ஆயுதங்களாக கண்டறிந்துள்ளோம். குறிப்பாக தொற்று உள்ளவர்களை 72 மணி நேரத்துக்குள் அடையாளம் கண்டுகொண்டால், தொற்றின் வேகம் குறைவதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே தொற்று உள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்களை 72 மணி நேரத்துக்குள் கண்டறிய வேண்டும் என்பதை ஒரு மந்திரமாக கடைப்பிடிக்க வேண்டும். அதைப்போலவே கைகளை கழுவுதல், சமூக இடைவெளி, முக கவசம் அணிவதையும் அன்றாட கடமையாக செயல்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனைகள் நாளொன்றுக்கு 7 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரித்தும் வருகிறது. இது கொரோனா தொற்று உடையவர்களை முன்கூட்டியே கண்டுபிடிக்கவும், தனிமைப்படுத்தவும் உதவுகிறது.

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இது உலகளவிலான விகிதத்தை விட மிகவும் குறைவாக உள்ளது. இது ஒரு திருப்திகரமான விஷயம் ஆகும். இந்த நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. அத்துடன் இந்த விகிதத்தை 1 சதவீதத்துக்கும் குறைவாக கொண்டு வரும் இலக்கை விரைவில் எட்ட முடியும்.

எனவே பரிசோதனைகளை அதிகரித்து தொற்றை கண்டறிந்து கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும். இந்த 10 மாநிலங்களும் கொரோனாவை வென்றுவிட்டால், ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகளுடன், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஹர்சவர்தன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கொரோனா தொடர்பாக மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நடத்திய 7-வது ஆலோசனை கூட்டம் இதுவாகும்.


Next Story